குஜராத் மக்கள் குறித்து அவதூறு - பீகார் துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவ் மீது அகமதாபாத் நீதிமன்றத்தில் வழக்கு

குஜராத் மக்களை அவதூறாக பேசியதாக குற்றம் சாட்டி பீகார் துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவ் மீது அகமதாபாத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

Update: 2023-04-28 04:09 GMT

அகமதாபாத்,

கடந்த மாதம் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பீகார் துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவ் கூறுகையில் "மெகுல் சோக்ஸி மீதான ரெட் கார்னர்நோட்டீஸ் வாபஸ் பெறப்பட்டுள்ளது. இன்றைய சூழலில் குஜராத்தியர் மட்டுமே மோசடி செய்பவராக உள்ளனர். எல்ஐசி, வங்கிப் பணத்தை மோசடி செய்தால் மத்தியஅரசே நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் பாஜக ஆட்சியில் சிபிஐ கூண்டுக்கிளி போல உள்ளது" என்று குற்றம் சாட்டினார்.

தேஜஸ்வி யாதவின் இந்த பேச்சு தொடர்பாக குஜராத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் ஹரேஷ்மேத்தா, குஜராத்தின் அகமதாபாத் நீதிமன்றத்தில் தேஜஸ்வி யாதவ் மீதுஅவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். இந்திய தண்டனை சட்டம்499 மற்றும் 500-வது பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

"அவர் தாக்கல் செய்த மனுவில் ஒட்டுமொத்த குஜராத் மக்களையும் மோசடிக்காரர்கள் என்று தேஜஸ்வி யாதவ் குற்றம் சாட்டியுள்ளார். அவர் தொடர்ச்சியாக குஜராத் மக்களை அவமதித்து வருகிறார். துணை முதல்-மந்திரி பதவியில் இருப்பவர் இவ்வாறு பேசுவது அழகல்ல. அவர் மீது இந்திய தண்டனை சட்டம் 499 மற்றும் 500-வது பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று ஹரேஷ் மேத்தா தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு மே 1-ம் தேதி விசாரணைக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் வழக்கு தொடர்பாக தேஜஸ்வி யாதவுக்கு சம்மன் அனுப்பப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்