டெல்லியில் இருந்து வடகிழக்கு மாநிலங்களுக்கு சுற்றுலா ரெயில் இயக்க முடிவு
டெல்லியில் இருந்து வருகிற 16-ந்தேதி முதல் பாரத் கவுரவ் டீலக்ஸ் ஏ.சி. சுற்றுலா ரெயில் இயக்கப்படும்.;
புதுடெல்லி,
இந்தியாவில் வடகிழக்கு மாநிலங்களில் சுற்றுலாவை ஊக்குவிக்கும் முயற்சியாக மத்திய ரெயில்வே அமைச்சகம் திட்டங்களை தீட்டி வருகிறது.
இதன்படி, ஐ.ஆர்.சி.டி.சி. நிறுவனத்துடன் இணைந்து வடகிழக்கு பகுதிகளுக்கான சுற்றுலா ரெயிலை இயக்க முடிவாகி உள்ளது. இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றையும் வெளியிட்டு உள்ளது.
டெல்லியில் சப்தர்ஜங் ரெயில் நிலையத்தில் இருந்து வருகிற 16-ந்தேதி முதல் பாரத் கவுரவ் டீலக்ஸ் ஏ.சி. சுற்றுலா ரெயில் இயக்கப்படும். இதில், அசாம், திரிபுரா, நாகலாந்து மற்றும் மேகாலயா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள முக்கிய சுற்றுலா பகுதிகளை ரெயில் கடந்து செல்லும்.
இந்த ரெயிலில், 3 வகையான ஏ.சி. பெட்டிகள் உள்ளன. முழுவதும் ஏ.சி. வசதியுடன் கூடிய ரெயிலில், சி.சி.டி.வி. கேமிராக்கள் பாதுகாப்பு வசதிகளுக்காக இணைக்கப்பட்டு உள்ளன.
ஒவ்வொரு பெட்டியிலும் பாதுகாப்புக்கென்று காவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். சுற்றுலா தலங்களுக்கு ரெயில் பயணம் செய்து விட்டு, மீண்டும் டெல்லிக்கு திரும்பும். மொத்தம் 5,800 கி.மீ. தொலைவை ரெயில் கடந்து செல்லும்.
15 நாட்கள் கொண்ட இந்த சுற்றுலாவில், ஏ.சி. ஓட்டல்களில் இரவில் தங்கும் வசதி, அனைத்து வகையான சைவ உணவுகள், அனைத்து பகுதிகளுக்கும் சென்று பார்வையிட பஸ் வசதி, பயண காப்பீடு, சுற்றுலா பாதுகாப்பு சேவை உள்ளிட்ட விசயங்கள் இடம்பெறும்.