கர்நாடக பால் கூட்டமைப்பு நிர்வாகிகள் கூட்டத்தில் பால் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்த்த முடிவு; அரசின் ஒப்புதல் கிடைக்குமா?

கர்நாடகத்தில் பால் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்த்த கர்நாடக பால் கூட்டமைப்பு நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது. பால் கூட்டமைப்பு தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருவதால் பால் விலை உயர்வுக்கு அரசு ஒப்புதல் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Update: 2022-09-12 22:42 GMT

பெங்களூரு:

அரசுக்கு கோரிக்கை

கர்நாடகத்தில் பால் கூட்டமைப்பு சார்பில் 'நந்தினி' என்ற பெயரில் பாக்கெட்டுகள் மூலம் பால் விற்பனை செய்யப்படுகிறது.கர்நாடகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலும் இந்த பால் வினியோகம் செய்யப்படுகிறது. கர்நாடகத்தில் அந்த கூட்டமைப்பு, 'நந்தினி' பால் விலை ஒரு லிட்டர் ரூ.37-க்கு வினியோகம் செய்கிறது. அந்த பால் வணிக நிறுவனங்கள், கடைகள் பதப்படுத்தும் வசதிக்காக 3 ரூபாயை சேர்த்து லிட்டர் ரூ.40-க்கு விற்பனை செய்கிறது.

இந்த நிலையில் கர்நாடக பால் கூட்டமைப்பு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு லிட்டருக்கு 3 ரூபாய் வரை விலையை உயர்த்துமாறு மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்தது. அந்த கோரிக்கை விடுக்கப்பட்டு 8 மாதங்கள் ஆகியும் இதுவரை விலை உயர்வுக்கு அரசு ஒப்புதல் வழங்கவில்லை. அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் ஏற்கனவே மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதாலும், சட்டசபை தேர்தல் நெருங்குவதாலும் பால் விலையை உயர்த்த அரசு தயங்கி வருகிறது.

ஒருமித்த தீர்மானம்

இந்த நிலையில் கர்நாடக பால் கூட்டமைப்பு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அதன் தலைவர் பாலச்சந்திர ஜார்கிகோளி எம்.எல்.ஏ. தலைமையில் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் மாநிலத்தில் உள்ள 18 மாவட்ட பால் கூட்டமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் மாநிலத்தில் நந்தினியின் பால் விலையை லிட்டருக்கு ரூ.3 உயர்த்த ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. இந்த ஒருமித்த தீர்மானத்திற்கு அனுமதி வழங்குமாறு மாநில அரசிடம் மீண்டும் கர்நாடக பால் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து கர்நாடக பால் கூட்டமைப்பு அதிகாரிகள் கூறுகையில், 'பால் விலையை உயர்த்துமாறு மாவட்ட பால் கூட்டமைப்புகள் மாநில கூட்டமைப்புக்கு கோரிக்கை விடுத்தது. இதுகுறித்து கர்நாடக பால் கூட்டமைப்பு தலைவர் அரசுக்கு கோரிக்கை விடுத்தார். 8 மாதங்கள் ஆகியும் அரசு இதுவரை பால் உயர்வுக்கு அனுமதி அளிக்கவில்லை. அதனால் கர்நாடக பால் கூட்டமைப்பு நிர்வாகிகள் கூட்டத்தில் பால் விலையை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்களின் பால் விலை நந்தினியை விட லிட்டருக்கு ரூ.8 அதிகமாக உள்ளது' என்றனர்.

அரசு ஒப்புதல்

கர்நாடக பால் கூட்டமைப்பு பால் விலையை உயர்த்த ஒருமனதாக முடிவு செய்திருந்தாலும், இதற்கு அரசு ஒப்புதல் வழங்கிய பிறகே அமலுக்கு வரும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அரசின் அனுமதி இல்லாமலும் பால் விலையை பால் கூட்டமைப்பு உயர்த்தலாம் என்றும் சொல்லப்படுகிறது.

ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வால் கர்நாடகத்தில் நந்தினி பால் விலை உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் தற்போது மேலும் லிட்டருக்கு ரூ.3 விலை உயர்த்த முடிவு செய்திருப்பது மக்கள் கவலை அடைந்துள்ளனர். இதனால் டீ, காபி விலையும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்