இந்தியா-மியான்மர் எல்லை பகுதியை மூட முடிவு; அமித்ஷா அறிவிப்பு
இந்தியா மற்றும் மியான்மர் எல்லை முழுவதும் 1,643 கி.மீ. தொலைவுக்கு வேலி அமைப்பது என மத்திய அரசு முடிவு செய்தது.
புதுடெல்லி,
இந்தியா மற்றும் மியான்மர் நாடுகள் இடையேயான எல்லையானது மிசோரம், மணிப்பூர், நாகாலாந்து மற்றும் அருணாசல பிரதேசம் மாநிலங்கள் வழியே நீண்டு செல்கிறது. இதில், சுதந்திர முறையில் இரு நாட்டினரும் இயங்குவதற்கான அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதன்படி, விசா போன்ற எந்தவித ஆவணங்களும் இன்றி இரு நாட்டு எல்லையையொட்டிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் மற்ற நாட்டின் எல்லை பகுதிக்குள் 16 கி.மீ. தொலைவு வரை சென்று வரமுடியும்.
இந்தியாவின் கிழக்கு கொள்கை இயக்கத்தின் ஒரு பகுதியாக 2018-ம் ஆண்டு இது அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில், வேலி போடப்படாத சர்வதேச எல்லை வழியே போதை பொருட்கள் கடத்தப்படுகின்றன என மெய்தி இனத்தினர் குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளனர்.
போரஸ் எல்லை வழியே பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் நுழைய கூடும் என்றும் அதனால், எல்லை பகுதியில் வேலி அமைக்க வேண்டும் என்றும் அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து, 2 நாட்களுக்கு முன், இந்தியா மற்றும் மியான்மர் எல்லை முழுவதும் 1,643 கி.மீ. தொலைவுக்கு வேலி அமைப்பது என மத்திய அரசு முடிவு செய்தது.
இந்த சூழலில், இரு நாடுகள் இடையேயான சுதந்திர முறையில் இயக்கம் கொள்கையை முடிவுக்கு கொண்டு வருவது என முடிவானது. இதன்படி, அதனை முடிவுக்கு கொண்டு வருவதற்கான நடைமுறையை மத்திய வெளிவிவகார அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது என மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று கூறியுள்ளார்.
இதுபற்றி அமித்ஷா வெளியிட்ட எக்ஸ் சமூக ஊடக பதிவில், நம்முடைய எல்லைகளை பாதுகாப்பது என்பது பிரதமர் நரேந்திர மோடியின் தீர்மானம். இதன்படி, இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் வடகிழக்கு மாநிலங்களின் மக்கள் தொகை கட்டமைப்பை பராமரிப்பது ஆகியவற்றை உறுதி செய்வதற்காக மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது என்று தெரிவித்து உள்ளார்.
அரசின் இந்த முடிவுக்காக, பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு, மணிப்பூர் முதல்-மந்திரி பைரன் சிங் இன்று தன்னுடைய நன்றியை தெரிவித்து கொண்டார். எனினும், பழங்குடியின உறவுகளை துண்டிக்கும் வகையில் இந்த நடவடிக்கை அமையும் என்று நாகா மற்றும் குகி அமைப்புகள் இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.