உத்தர பிரதேசத்தில் மழை, வெள்ள பாதிப்புக்கு பலி 11 ஆக உயர்வு
உத்தர பிரதேசத்தில் மழை, வெள்ளத்திற்கு 17 மாவட்ட மக்கள் பெருமளவில் பாதிப்பு அடைந்து உள்ளனர்.
லக்னோ,
உத்தர பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதனால், பல நகரங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து சாலைகளில் ஓடுகிறது. வீடுகள் மற்றும் கடைகளுக்கு உள்ளும் வெள்ளநீர் புகுந்து உள்ளது. பல ஆயிரக்கணக்கான ஹெக்டேர் விளை நிலங்களும் நீரால் சூழப்பட்டு உள்ளன.
இந்த நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில், மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இன்று இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய கூடும் என எச்சரிக்கை விடுத்து உள்ளது. 12-ந்தேதி வரை மழை பெய்யும் என்றும் தெரிவித்து உள்ளது.
இதனை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ., மதரசா கல்வி வாரியம் மற்றும் சமஸ்கிருதம் பயிற்றுவிக்கும் பள்ளிகள் உள்பட அலிகாரில் வருகிற 12-ந்தேதி வரை (இன்று) 12-ம் வகுப்பு வரையிலான அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
கனமழையை தொடர்ந்து, ஏற்பட்ட இடி, மின்னல் தாக்கியதில் கான்பூர் தெகாத் மாவட்டத்தில் வசித்த 2 பேர் சில நாட்களுக்கு முன் உயிரிழந்தனர். 8 வளர்ப்பு பிராணிகளும் உயிரிழந்தன. உத்தர பிரதேசத்தில், மழை தொடர்புடைய சம்பவங்களில் சிக்கி உயிரிழந்து உள்ளவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்வடைந்து உள்ளது.
17 மாவட்டங்களில் 900 கிராமங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. வெள்ள பாதிப்புக்கு 8.43 லட்சம் மக்கள் அவதியுறுகின்றனர். ஜான்சி நகரில் மட்டுமே இடி, மின்னலுக்கு 7 பேர் உயிரிழந்து உள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். வெள்ள மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் பல்வேறு துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.