மேகவெடிப்பால் கனமழை, நிலச்சரிவு: அமர்நாத்தில் பலி எண்ணிக்கை 16 ஆக உயர்ந்தது; 15 ஆயிரம் பக்தர்கள் மீட்பு

அமர்நாத் குகை கோவில் பகுதியில் மேகவெடிப்பால் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கிய 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் மீட்கப்பட்டனர். இந்த பேரிடரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.

Update: 2022-07-09 19:40 GMT

அமர்நாத் புனித யாத்திரை

காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் இமயமலைத்தொடரில் அமர்நாத் குகை கோவில் உள்ளது. இங்குள்ள பனிலிங்கத்தை தரிசிக்க நாடு முழுவதிலும் இருந்து ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சென்று வருகின்றனர்.

கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3,800 மீட்டர் உயரத்தில் இருக்கும் இந்த கோவிலுக்கு நடைபெறும் 43 நாள் புனித யாத்திரை கடந்த 30-ந்தேதி தொடங்கியது. கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகள் இந்த புனித யாத்திரை நடைபெறாததால், இந்த ஆண்டு ஏராளமான பக்தர்கள் இதில் பங்கேற்று வருகின்றனர்.

அடித்து செல்லப்பட்ட கூடாரங்கள்

இந்த நிலையில் அமர்நாத் குகை கோவில் பகுதியில் நேற்று முன்தினம் மாலையில் திடீரென மேகவெடிப்பு ஏற்பட்டு பேய்மழை கொட்டியது. சில நிமிடங்களில் கொட்டித்தீர்த்த இந்த கனமழையால், அந்த மலைப்பிராந்தியத்தில் பெரும் பிரளயமே ஏற்பட்டது.

கண நேரத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கும், நிலச்சரிவு சம்பவங்களும் அங்கு பக்தர்கள் தங்குவதற்காக போடப்பட்டிருந்த கூடாரங்களையும், சமூக சமையலறைகளையும் நிர்மூலமாக்கியது. சுமார் 25 கூடாரங்கள் மற்றும் சமையலறை குடில்கள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டன. அது மட்டுமின்றி கூடாரங்களில் இருந்த பக்தர்களும் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டதுடன், பலர் நிலச்சரிவு இடிபாடுகளுக்குள்ளும், வெள்ளப்பெருக்கிலும் சிக்கினர்.

மீட்பு பணியில் ஹெலிகாப்டர்கள்

தங்கள் உறவுகளை வெள்ளத்தில் பறிகொடுத்த பக்தர்கள் அலறினர். அத்துடன் நிலச்சரிவில் சிக்கி காயமடைந்தவர்களும் மரண ஓலமிட்டனர். இதனால் அந்த பிராந்தியத்தில் பெரும் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து உடனடியாக அங்கு மீட்பு பணிகள் தொடங்கப்பட்டன. தேசிய பேரிடர் மீட்பு படை, ராணுவம், எல்லை பாதுகாப்பு படை மற்றும் இந்தோ-திபெத் பாதுகாப்பு படை என மிகப்பெரும் படையே இந்த பணிகளில் ஈடுபடுத்தப்பட்டன.

காயமடைந்தவர்களையும், வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்டவர்களையும் மலையடிவாரத்துக்கு கொண்டு வருவதற்காக இலகு ரக ஹெலிகாப்டர்களும் பயன்படுத்தப்பட்டன.

இந்த படையினர் போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகளை மேற்கொண்டனர். இரவிலும் துரிதமாக பணிகளை மேற்கொண்ட அவர்கள் வெள்ளத்தில் சிக்கியவர்களை துரிதமாக மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்றனர்.

16 உடல்கள் மீட்பு

அந்தவகையில் குகை கோவிலுக்கு அருகே ஆங்காங்கே வெள்ளத்தில் சிக்கியிருந்த 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் மீட்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் பஞ்ச்தர்ணிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதைப்போல காயமடைந்தவர்களும் மீட்கப்பட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவ்வாறு 25-க்கு மேற்பட்ட பக்தர்கள் சிகிச்சையில் உள்ளனர். ராணுவத்தை சேர்ந்த மருத்துவக்குழுவினரும் வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது ஒருபுறம் இருக்க இந்த நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி பலரும் உயிரிழந்து உள்ளனர். இதில் நேற்று மாலை வரை 16 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. அவை பல்தாலுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

புனித யாத்திரை நிறுத்தம்

இன்னும் பலரை காணவில்லை என தகவல் வெளியாகி இருக்கிறது. அவர்களை தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன. நிலச்சரிவு இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பவர்களை கண்டறிய மோப்ப நாய்களும் களமிறக்கப்பட்டு உள்ளன.

அமர்நாத் பேரிடரில் தப்பியவர்களில் தெலுங்கானா பா.ஜனதா எம்.எல்.ஏ. ராஜாசிங்கும் ஒருவர். குடும்பத்தினருடன் ஹெலிகாப்டர் மூலம் அமர்நாத்தை அடைந்த இவர், வானிலை மோசமடைந்ததால் குதிரைகள் மூலம் வேகமாக திரும்பியதாக தெரிவித்து உள்ளார்.

நாட்டையே உலுக்கியுள்ள இந்த பேரிடரை தொடர்ந்து அமர்நாத் புனித யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது. எனினும் 6 ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் அடங்கிய 11-வது குழு நேற்று ஜம்முவில் இருந்து புறப்பட்டு சென்றது.

விசாரணை நடத்த வேண்டும்

இதற்கிடையே அமர்நாத் துயர நிகழ்வு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி பரூக் அப்துல்லா மத்திய அரசை வலியுறுத்தி உள்ளார்.

ஆபத்து நிறைந்த இந்த பகுதியில் கூடாரங்களும், சமையலறைகளும் அமைத்ததை கேள்வி எழுப்பியுள்ள அவர், இந்த சம்பவம் எப்படி, ஏன் நடந்தது? என விசாரிக்க குழு அமைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டு உள்ளார்.

இதைப்போல இந்த சம்பவத்தில் உண்மையை வெளிக்கொண்டு வருமாறு எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர் யஷ்வந்த் சின்காவும் கோரிக்கை விடுத்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்