காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுக்கு கொலை மிரட்டல்: பா.ஜனதா பிரமுகர் ஐதராபாத்தில் கைது

காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுக்கு கொலை மிரட்டல் விடுத்த பா.ஜனதா பிரமுகர் ஐதராபாத்தில் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-11-14 21:51 GMT

கலபுரகி: காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுக்கு கொலை மிரட்டல் விடுத்த பா.ஜனதா பிரமுகர் ஐதராபாத்தில் கைது செய்யப்பட்டார்.

கொலை மிரட்டல்

கர்நாடக மாநிலம் கலபுரகி மாவட்டம் சித்தாப்புரா தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக பணியாற்றி வருபவர் பிரியங்க் கார்கே. இவர் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேயின் மகன் ஆவார். பிரியங்க் கார்கே முன்னாள் மந்திரியும் ஆவார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கலபுரகியை சேர்ந்த பா.ஜனதா பிரமுகர் மணிகாந்த் ரத்தோடு என்பவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும்போது, பிரியங்க் கார்கே எம்.எல்.ஏ.வுக்கு கொலை மிரட்டல் விடுப்பது போல பேசி இருந்தார்.

இதுகுறித்து காங்கிரஸ் பிரமுகரான திப்பண்ணா என்பவர் கலபுரகி டவுனில் உள்ள பிரம்மாபுரா போலீஸ் நிலையத்தில் மணிகாந்த் மீது புகார் அளித்து இருந்தார். மேலும் பிரியங்க் கார்கே எம்.எல்.ஏ.வுக்கு கொலை மிரட்டல் விடுத்த மணிகாந்தாவை கைது செய்ய கோரி கலபுரகி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு காங்கிரசார் போராட்டமும் நடத்தி இருந்தனர்.

கைது

இந்த பிரச்சினை விசுவரூபம் எடுத்ததால் மணிகாந்த்தை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டினர். ஆனால் அவர் தலைமறைவாகிவிட்டார். இதனால் மணிகாந்த்தை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் மணிகாந்த் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ஒரு ஓட்டலில் பதுங்கி இருப்பதாக பிரம்மாபுரா போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து நேற்று முன்தினம் இரவு ஐதராபாத் சென்ற பிரம்மாபுரா போலீசார் அங்கு ஓட்டலில் தங்கி இருந்த மணிகாந்த்தை கைது செய்து கலபுரகிக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கைதான மணிகாந்த் மீது வழக்கு எண் 506-ன் கீழ் (உயிருக்கு அச்சுறுத்தல்) வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்