மடாதிபதி சித்தேஸ்வர் சுவாமி மரணம்; மடத்திலேயே இன்று உடல் தகனம்

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மடாதிபதி சித்தேஸ்வர் சுவாமி நேற்று மரணம் அடைந்தார். அவரது உடல் இன்று (செவ்வாய்க்கிழமை) மடத்திலேயே தகனம் செய்யப்படுகிறது.

Update: 2023-01-02 21:20 GMT

பெங்களூரு:

சித்தேஸ்வர் சுவாமி

கர்நாடக மாநிலம் விஜயாப்புராவில் ஞானயோகேஸ்வரா மடம் உள்ளது. இந்த மடத்தின் மடாதிபதியாக இருப்பவர் சித்தேஸ்வர் சுவாமி (வயது 82). ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து உள்ள இவரை வடகர்நாடக மக்கள் நடமாடும் கடவுள் என்று அழைத்து வருகின்றனர்.

இந்த நிலையில் வயோதிகத்தால் ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சித்தேஸ்வர் சுவாமியின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. அவரை மடத்தின் ஊழியர்கள் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல முயன்றனர்.

மடத்தில் வைத்து சிகிச்சை

ஆனால் மடத்தை விட்டு வர மாட்டேன் என்று சித்தேஸ்வர் சுவாமி கூறியதால், அவருக்கு மடத்தில் வைத்தே டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த நிலையில் சித்தேஸ்வர் சுவாமியின் உடல்நிலை ஏற்ற, இறக்கங்களை கண்டு வந்தது.

இதற்கிடையே சித்தேஸ்வர் சுவாமியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் பரவியதால் மடத்தின் முன்பு அவரது பக்தர்கள் கடந்த 2 நாட்களாக குவிந்து உள்ளனர். முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையும் மடத்திற்கு நேரில் சென்று சித்தேஸ்வர் சுவாமியிடம் உடல்நலம் விசாரித்தார்.

பிரதமர் மோடி நலம் விசாரித்தார்

மேலும் மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷியின் செல்போன் அழைப்பு மூலம் பிரதமர் மோடியும், சித்தேஸ்வர் சுவாமியின் உடல்நலம் விசாரித்தார்.

இந்த நிலையில் கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா நேற்று ஞானயோகேஸ்வரா மடத்திற்கு நேரில் சென்று மடாதிபதி சித்தேஸ்வர் சுவாமியிடம் உடல்நலம் விசாரித்தார். இந்த நிலையில் மடாதிபதி சித்தேஸ்வர் சுவாமி குணம் அடைய வேண்டி வடகர்நாடகத்தில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது.

திடீர் மரணம்

இதுபோல பல்வேறு மடங்களின் மடாதிபதிகளும், சித்தேஸ்வர் சுவாமி பூரண குணம் அடைய வேண்டி சிறப்பு பூஜைகள் செய்து வருகின்றனர். மேலும் சிலர் உருளு சேவையிலும் ஈடுபட்டு வந்தனர். விஜயாப்புராவில் உள்ள அப்துல் ரசாக் தர்காவிலும் சித்தேஸ்வர் சுவாமி குணம் அடைய வேண்டி சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

இந்த நிலையில் நேற்றிரவு சித்தேஸ்வர் சுவாமியின் உடல் நிலை திடீரென்று மோசமடைந்தது. அவருக்கு டாக்டர்கள் உயிர் காக்கும் கருவிகள் மூலம் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் இரவு 10 மணி அளவில் உயிரிழந்தார்.

இன்று உடல் தகனம்

இந்த தகவலை கேட்டு மடத்தின் நிர்வாகிகள், பக்தர்கள், மடத்தின் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் கண்ணீர்விட்டு கதறினர். மறைந்த சித்தேஸ்வர் சுவாமியின் உடல் இன்று (செவ்வாய்க்கிழமை) விஜயப்புராவில் உள்ள ஒரு பள்ளியின் மைதானத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. அங்கிருந்து அவரது உடல் ஊர்வலமாக மடத்திற்கு எடுத்துச்செல்லப்படுகிறது.

பின்னர் அங்கு அவரது உடலுக்கு மடத்தின் சம்பிரதாய முறைப்படி இறுதிச்சடங்குகள் நடத்தி மாலை 5 மணி அளவில் அவரது உடல் தகனம் செய்யப்படுகிறது. மறைந்த சித்தேஸ்வர் சுவாமி கடந்த 2014-ம் ஆண்டே தான் இறந்தால் தனது உடலை மடத்திலேயே தகனம் செய்ய வேண்டும் என்று கடிதம் எழுதி வைத்திருந்தார். அதன்படி மடத்திலே அவரது உடல் தகனம் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்