பெங்களூரு மாநகராட்சி தேர்தலை நடத்த கர்நாடக தேர்தல் ஆணையத்துக்கு கெடு- சுப்ரீம் கோர்ட்டு அதிரடி

பெங்களூரு மாநகராட்சி தேர்தலை நடத்த கர்நாடக தேர்தல் ஆணையத்திற்கு கெடு விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-05-20 22:37 GMT

பெங்களூரு: பெங்களூரு மாநகராட்சி தேர்தலை நடத்த கர்நாடக தேர்தல் ஆணையத்திற்கு கெடு விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

ஐகோர்ட்டில் மனு

198 வார்டுகளை கொண்ட பெங்களூரு மாநகராட்சியின் மக்கள் பிரதிநிதிகள் சபை (கவுன்சில்) பதவி காலம் கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிறைவடைந்தது. ஆனால் உரிய காலத்திற்குள் மாநகராட்சிக்கு தேர்தல் நடத்தப்படாத காரணத்தால் நிர்வாக அதிகாரி நியமிக்கப்பட்டார். கடந்த 20 மாதங்களாக மக்கள் பிரதிநிதிகள் இன்றி அதிகாரிகளே வளர்ச்சி பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

கர்நாடக அரசு புதிய சட்டம் கொண்டு வந்து பெங்களூரு மாநகராட்சி வார்டுகள் 198-ல் இருந்து 243 ஆக அதிகரித்துள்ளது. அதனால் வார்டு மறுவரையறை பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக மாநகராட்சி தேர்தல் நடைபெறவில்லை. இந்த நிலையில் பெங்களூரு மாநகராட்சி தேர்தலை நடத்தும்படி மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட கோரி காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் சிவராஜ் உள்ளிட்டோர் கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

இடைக்கால தடை

இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 4-ந் தேதி தீா்ப்பு வழங்கியது. 6 வாரங்களுக்குள் மாநகராட்சி தேர்தல் தேதியை அறிவிக்க வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடப்பட்டது. இதை எதிர்த்து கர்நாடக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கில் கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. அந்த மனு மீது விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று நீதிபதிகள் கான்வில்கர், பர்டிவாலா ஆகியோர் அடங்கிய அமர்வில் அந்த மனு மீது விசாரணை நடைபெற்றது.

அப்போது கர்நாடக அரசு சார்பில் ஆஜரான வக்கீல், பெங்களூரு மாநகராட்சியில் வார்டுகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வார்டு மறுவரையறை பணிகள் நடைபெற்று வருவதாகவும், பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டி இருப்பதாகவும் எடுத்து கூறினார். இ்ந்த பணிகளை நிறைவு செய்ய 8 வாரங்கள் காலஅவகாசம் தருமாறு வாதிட்டார்.

8 வாரங்கள் காலஅவகாசம்

கர்நாடக அரசின் இந்த வாதங்களை ஏற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட்டு, 8 வாரங்களுக்கு பிறகு பெங்களூரு மாநகராட்சி தேர்தல் நடத்த வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது. நீதிபதிகள் தங்களின் தீர்ப்பில், "வார்டு மறுவரையறை மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது போன்ற பணிகளை செய்து முடிக்க 8 வாரங்கள் காலஅவகாசம் வழங்குமாறு மாநில அரசு கேட்டுள்ளது.

இந்த காலஅவகாசம் வழங்கப்படுகிறது. 8 வாரங்கள் முடிவடைந்த பிறகு அரசு, வார்டு மறுவரையறை மற்றும் இட ஒதுக்கீட்டிற்கான அரசாணையை பிறப்பிக்க வேண்டும். அந்த அரசாணை பிறப்பிக்கப்பட்ட நாளில் இருந்து ஒரு வாரத்திற்குள் தேர்தல் பணிகளை மாநில தேர்தல் ஆணையம் தொடங்க வேண்டும்" என்று கூறியுள்ளனர். இந்த மனு மீதான அடுத்த விசாரணை வருகிற ஜூலை மாதம் 22-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

பசவராஜ் பொம்மை

சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவு குறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியதாவது:-பெங்களூரு மாநகராட்சிக்கு 8 வாரங்களுக்கு பிறகு தேர்தல் நடத்தும்படி சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்துள்ள உத்தரவை வரவேற்கிறேன். வார்டு மறுவரையறை பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. இந்த பணிகளை விரைவாக முடித்து அரசாணை பிறப்பிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்படும். பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய ஒரு ஆணையத்தை அமைத்துள்ளோம். அந்த ஆணையம் தனது அறிக்கையை விரைவாக அரசுக்கு வழங்கும்படி கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

மத்தியபிரதேச வழக்கு ஒன்றில் சுப்ரீம் கோர்ட்டு பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு இட ஒதுக்கீடு இல்லாமலேயே உள்ளாட்சி தேர்தலை நடத்தும்படி உத்தரவிட்டது. ஆனால் இந்த வழக்கில் இட ஒதுக்கீட்டுடன் தேர்தல் நடத்த சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது. கர்நாடக அரசு முன்வைத்த வாதத்தை ஏற்றுக்கொண்டுள்ளது. இது நல்ல முடிவு. சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளதால் மாநகராட்சி தேர்தலை தள்ளிப்போடும் எண்ணம் இல்லை. இந்த தேர்தலை எதிர்கொள்ள பா.ஜனதா தயாராக உள்ளது.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்