குண்டும் குழியுமான சாலையில் சென்ற ஆம்புலன்ஸ்: இறந்த நபர் உயிர் பிழைத்த அதிசயம்

மருத்துவமனையில் இறந்ததாக கூறப்பட்ட முதியவர், ஆம்புலன்சில் கொண்டு செல்லும்போது மீண்டும் உயிர் பிழைத்து இருப்பதாக அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

Update: 2024-01-13 07:27 GMT

சண்டிகார்,

இந்தியாவில் சாலைகள் இல்லாத ஊர்களைக் கூட சொல்லிவிடலாம். ஆனால் குண்டும் குழியும் இல்லாத சாலைகளை கண்டுபிடிப்பது கடினம் என்று சொல்லும் அளவுக்கு சர்வ சாதாரணமாக சாலைகளில் குழிகளை காண முடியும். வாகன ஓட்டிகளை நாள்தோறும் புலம்ப வைத்துக் கொண்டு இருக்கும் சாலையில் கிடக்கும் குண்டு குழிகளால் ஒரு குடும்பம் மகிழ்ச்சி அடைந்துள்ளது. அரியானா மாநிலத்தை சேர்ந்தவர் தர்ஷன் சிங் ப்ரார். உடல் நலம் பாதிக்கப்பட்டதால் உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனையில் மருத்துவர்கள் கூறினர். இதையடுத்து, ஆம்புலன்ஸ் ஒன்றில் ப்ராரின் உடல் எடுத்து வரப்பட்டது. ப்ராரின் பேரன் உடன் இருந்தான். ஆம்புலன்ஸில் உடல் கொண்டு வந்து இருக்கும் போதே ப்ராரின் உடலுக்கு இறுதிச்சடங்குகள் செய்ய வீட்டில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன.

உறவினர்கள் எல்லாம் துக்கத்துடன் வீட்டில் குவிந்து இருந்தனர். ஆம்புலன்ஸ் சாலையில் மின்னல் வேகத்தில் வந்து கொண்டிருந்தபோது திடீரென பள்ளத்தில் விழுந்து எழுந்தது. அப்போது ப்ராரின் உடல் லேசாக அசைவது போல இருந்தது. இதைப்பார்த்த அவரது பேரன் பள்ளத்தில் விழுந்ததால் இப்படி இருக்கும் என பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. சிறிது நேரத்தில் மீண்டும் கை கால்கள் அசைந்தன. இதனால், நடப்பது கனவா? நனவா? என்று ஒரு நிமிடம் வியப்புடன் பார்த்த அவரது பேரன் இதயத்துடிப்பு இருப்பதையும் கவனித்தார்.

உடனடியாக ஆம்புலன்ஸ் டிரைவரிடம் கூறி வண்டியை ஆஸ்பத்திரிக்கு யூ டர்ன் போட வைத்தார். ஆஸ்பத்திரிக்கு சென்றதும் நடந்த விவரத்தை கூறியுள்ளார். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்தபோது உயிர் இருந்தது. இந்த தகவலைக் கேட்டு மொத்த குடும்பமும் மகிழ்ச்சி அடைந்தது. துக்க வீடு அப்படியே மகிழ்ச்சி அடைந்த வீடாக மாறிவிட்டது. இதய நோயால் பாதிக்கப்பட்டு இருந்த ப்ரார் தற்போது கர்னாலில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல் நிலை ஆபத்தான கட்டத்தை தாண்டவில்லை என்று மருத்துவர்கள் கூறினர். உண்மையாகவே இது ஒரு அதிசயம்தான் என்றும் விரைவில் உடல் நலம் தேறி வருவார் என்றும் குடும்பத்தினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்