87 வயது மாமனாரை அடித்து, தாக்கி, கீழே தள்ளி விட்ட மருமகள்; சி.சி.டி.வி. காட்சியால் சிக்கினார்

முதியவர் வலியால் முனங்கியபடி காணப்பட்டார். இதுபற்றிய சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகி உள்ளன.;

Update:2024-03-13 11:39 IST

மைசூரு,

கர்நாடகாவில் மங்களூரு நகரில் மின் வாரியத்தில் உயரதிகாரியாக பணியாற்றி வருபவர் உமா சங்கரி. இவருடைய மாமனார் பத்மநாப சுவர்ணா (வயது 87). முதுமையால் தடி ஒன்றை வைத்து கொண்டு, நடந்து சென்று வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 9-ந்தேதி, வீட்டில் இருந்த மாமனாரை, நடந்து செல்ல உதவும் அந்த நீண்ட தடியை எடுத்து வந்து மருமகள் சங்கரி கடுமையாக தாக்கியுள்ளார்.

அவரிடம் வாக்குவாதத்திலும் ஈடுபட்டு உள்ளார். தொடர்ந்து தாக்கியதில், வலி பொறுக்காமல் அந்த முதியவர், அடிக்க வேண்டாம் என கெஞ்சுகிறார். அவரை தடுக்க முற்படுகிறார். ஆனால், மருமகள் அவரை தரையில் தள்ளி விட்டார். இதில், கீழே விழுந்த அந்த முதியவர் சோபாவின் ஓரத்தில் போய் முட்டி கொண்டார்.

இதன்பின்னரும் ஆத்திரம் அடங்காமல், வீட்டுக்குள்ளேயே கோபத்துடன் முன்னும் பின்னும் நடந்து செல்லும் அந்த பெண், திரும்பி வந்து, அறையின் கதவை பூட்டி விட்டு, மீண்டும் தடியை எடுத்து, அவரை அடிக்க சென்றார். ஆனால், இந்த முறை அவரை அடிக்காமல் விட்டுவிட்டார்.

இதன்பின்பு அறையில் இருந்து வெளியேறினார். அந்த முதியவர் வலியால் முனங்கியபடி காணப்பட்டார். இதுபற்றிய சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகி உள்ளன. கடுமையான காயமடைந்த பத்மநாப சுவர்ணா பின்னர் மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

அவருடைய மகள் அளித்த புகாரின்பேரில், மருமகளை போலீசார் கைது செய்தனர். அவர் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்