மயானத்திற்கு வர ஒரு பிரிவினர் எதிர்ப்பு: தலித் மூதாட்டி உடல் சாலையோரம் அடக்கம்
மயானத்திற்கு உடலை கொண்டு வர ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்ததால் தலித் மூதாட்டியின் உடல் சாலையோரம் அடக்கம் செய்யப்பட்ட அவல சம்பவம் துமகூரு அருகே நடந்து உள்ளது.
துமகூரு: மயானத்திற்கு உடலை கொண்டு வர ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்ததால் தலித் மூதாட்டியின் உடல் சாலையோரம் அடக்கம் செய்யப்பட்ட அவல சம்பவம் துமகூரு அருகே நடந்து உள்ளது.
சாலையோரம் உடல் அடக்கம்
துமகூரு மாவட்டம் மதுகிரி தாலுகாவில் உள்ளது பிஜ்வாரா கிராமம். இந்த கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட தலித் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். ஆனால் அந்த கிராமத்தில் உள்ள மயானத்தில் தலித் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் இறந்தால் அங்கு அடக்கம் செய்ய மற்றொரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் தலித் சமூகத்தை சேர்ந்த ஹனுமக்கா(வயது 75) என்ற மூதாட்டி நேற்று முன்தினம் இறந்தார்.
அவரது உடலை அடக்கம் செய்வதற்காக உறவினர்கள் மயானத்திற்கு எடுத்து சென்றனர். ஆனால் மற்றொரு பிரிவினர் ஹனுமக்காவின் உடலை மயானத்தில் அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் வேறு வழியின்றி சாலையோரமாக ஹனுமக்காவின் உடலை அவரது உறவினர்கள் அடக்கம் செய்து இறுதி அஞ்சலி செலுத்தினர். இதுதொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிகாரிகளுடன் ஆலோசனை
இதுகுறித்து தலித் அமைப்பை சேர்ந்தவர்கள் கூறுகையில், 'கர்நாடகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்களில் தலித் சமூகத்திற்கு தனியாக மயானம் இல்லை. இதனால் எங்கள் சமூகத்தை சேர்ந்தவர்கள் உயிரிழக்கும் போது அவர்களது உடல்களை அடக்கம் செய்ய கடும் சிரமத்தை அனுபவிக்க வேண்டி உள்ளது. துமகூரு மாவட்டத்தில் மட்டும் 200 கிராமங்களில் தலித் சமூகத்திற்கு தனியாக மயானம் இல்லை' என்று கூறினர்.
இந்த சம்பவம் குறித்து கர்நாடக சட்டத்துறை மந்திரி மாதுசாமி கூறும்போது, 'சிராவில் நடந்த சம்பவம் எனது கவனத்திற்கு வந்துள்ளது. பிஜ்வாரா கிராமத்தில் தலித் சமூகத்தினருக்கு தனியாக மயானம் அமைப்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளேன்' என்றார்.