இளம்பெண் பாலியல் புகார் கொடுத்ததால் ஆத்திரம்; பெண்ணை நிர்வாணப்படுத்தி தடுக்க முயன்ற மகனை அடித்துக்கொன்ற கும்பல்

பெண்ணை நிர்வாணப்படுத்திய கும்பல் தடுக்க முயன்ற அந்த பெண்ணின் மகனை அடித்துக்கொன்றது.

Update: 2023-08-28 04:59 GMT

போபால்,

மத்திய பிரதேச மாநிலம் சாஹர் மாவட்டம் பரோடியா நொஹரி கிராமத்தை சேர்ந்தவர் 18 வயது இளைஞர் நிதின் அஹிர்வார். இவரது அக்காவுக்கு அதே கிராமத்தை சேர்ந்த 4 பேர் 2019ம் ஆண்டு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். மேலும், அந்த இளம்பெண்ணை கடுமையாக தாக்கியுள்ளனர். தலித் சமூகத்தை சேர்ந்த பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் அளித்த நிலையில் தாக்குதல் நடத்திய 4 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், 4 பேர் மீது கொடுக்கப்பட்ட புகாரை திரும்பப்பெறும்படி நேற்று அந்த இளம்பெண்ணின் வீட்டிற்கு சென்று ஒரு கும்பல் மிரட்டியுள்ளது. ஆனால், அந்த மிரட்டலுக்கு இளம்பெண் பயப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் அந்த பெண்ணை கடுமையாக தாக்கியுள்ளது. மேலும், தடுக்க சென்ற இளம்பெண்ணின் தாயாரையும் கடுமையாக தாக்கியுள்ளது.

தன் தாய் மற்றும் சகோதரியை வீடு புகுந்து கும்பல் தாக்குவதை கண்டு அதிர்ச்சியடைந்த நிதின் அஹிர்வார் அந்த கும்பலை தடுக்க முயற்சித்துள்ளார்.

ஆனால், அந்த கும்பல் இளம்பெண்ணின் தாயாரை தாக்கியதுடன் அவரை நிர்வாணப்படுத்தியுள்ளது. மேலும், தடுக்க முயன்ற நிதினையும் அந்த கும்பல் சரமாரியாக தாக்கியுள்ளது. இந்த தாக்குதலில் படுகாயமடைந்த நிதின் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இளம்பெண்ணையும், அவரின் தாயாரையும் மீட்டனர். மேலும், கொல்லப்பட்ட நிதினின் உடலையும் பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தாக்குதல் நடத்திய 9 பேரை கைது செய்துள்ளனர். மேலும், தலைமறைவான சிலரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்