கம்மல் திருடியதாக கூறி தலித் சிறுவனை மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய கொடூரம்

கம்மல் திருடியதாக கூறி தலித் சிறுவனை மின் கம்பத்தில் கட்டிவைத்து தாக்கிய கொடூர சம்பவம் சிக்பள்ளாப்பூர் அருகே சிந்தாமணியில் நடந்துள்ளது.

Update: 2022-10-01 22:21 GMT

கோலார் தங்கவயல்: கம்மல் திருடியதாக கூறி தலித் சிறுவனை மின் கம்பத்தில் கட்டிவைத்து தாக்கிய கொடூர சம்பவம் சிக்பள்ளாப்பூர் அருகே சிந்தாமணியில் நடந்துள்ளது.

கம்மலை திருடியதாக கூறி...

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் மாலூர் தாலுகா மாஸ்தி அருகே கொல்லேரஹள்ளி கிராமத்தில் தலித் சமுதாயத்தை சேர்ந்த சிறுவன் சேத்தன் என்பவன் சாமி சிலையை தொட்டு வணங்கியதால் அவனது பெற்றோருக்கு மற்றொரு தரப்பினர் ரூ.60 ஆயிரம் அபராதம் விதித்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் அடங்குவதற்குள் கம்மலை திருடியதாக கூறி தலித் சிறுவனை மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கி கொடூர சம்பவம் நடந்துள்ளது. அதுபற்றிய விவரம் பின்வருமாறு:-

சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிந்தாமணி தாலுகா புறநகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட அம்பாஜி துர்கா கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட கெம்பதேவனஹள்ளி கிராமத்தை சேர்ந்த தம்பதி ஆனந்த்-அம்பிகா. தலித் சமுதாயத்தை சேர்ந்தவர்கள். இவர்களது மகன் யஷ்வந்த்(வயது 16). இந்த நிலையில் யஷ்வந்த், நேற்று முன்தினம் மாலை தனது நண்பர்களுடன் அப்பகுதியில் விளையாடியுள்ளான். அப்போது அவனுடன் விளையாடிய ஒரு சிறுமியின் கம்மல் காணாமல் போயுள்ளது.

இதற்கிடையே சிறுவர்கள் விளையாட்டு முடிந்து வீடுகளுக்கு சென்றுள்ளனர். அப்போது சிறுமி காதில் அணிந்திருந்த கம்மல் காணாமல் போனது குறித்து பெற்றோர் கேட்டுள்ளனர்.

மின்கம்பத்தில் கட்டிவைத்து...

மேலும் யாருடன் விளையாடினாய் என்று பெற்றோர் கேட்டபோது யஸ்வந்த் உட்பட சிறுவர்களுடன் விளையாடியதாக கூறியுள்ளாள். இதையடுத்து சிறுமியின் தந்தை நாராயணசாமி, உறவினர்களான நவீன், நஞ்சேகவுடா, ஹரீஷ், நாகராஜ், அம்பிகா, தொட்டகவுடா ஆகியோர் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த சிறுவனை அழைத்து கம்மல் காணாமல் போனது குறித்து கேட்டுள்ளனர். அதற்கு சிறுவன் தனக்கு ஒன்றும் தெரியாது என்று தெரிவித்துள்ளான். ஆனாலும் அவர்கள், சிறுவன் யஷ்வந்த் கம்மலை திருடிய சந்தேகத்தில் அவனிடம் துருவி, துருவி கேள்வி கேட்டதாக கூறப்படுகிறது. ஆனாலும் சிறுவன் தனக்கு ஒன்றும் தெரியாது என்று தெரிவித்துள்ளான். இதனால் ஆத்திரமடைந்த சிறுமியின் தந்தை, உறவினர்கள் சிறுவன் என்றும் பாராமல் யஷ்வந்தை தெருவில் உள்ள கம்பத்தில் கட்டி வைத்து தாக்கியுள்ளனர். இதில் வலி தாங்கமுடியாமல் சிறுவன் கதறியுள்ளான்.

மகனை தாக்கியதை அறிந்த சிறுவனின் தாய் அம்பிகா அலறி அடித்துக்கொண்டு மகனை கட்டி வைத்த இடத்திற்கு ஓடிவந்து தட்டிகேட்டுள்ளார். அப்போது நாராயணசாமி, அவரது உறவினர்கள் அம்பிகாவையும் தாக்கியுள்ளனர். மேலும் ஊரை விட்டு காலி செய்யும்படி எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுபற்றி சிந்தாமணி புறநகர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட சிறுவனையும், அவனது தாய் அம்பிகாவையும் மீ்ட்டு சிந்தாமணி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

3 பேர் கைது

மேலும் தாய்-மகன் அளித்த வாக்குமூலம் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து நாராயணசாமி, அவரது உறவினர்களான நவீன், நஞ்சேகவுடா ஆகிய 3 பேரை கைது செய்தனர். தப்பியோடி தலைமறைவான ஹரீஷ், நாகராஜ், அம்பிகா, தொட்டகவுடா ஆகிய 4 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

இதற்கிடையே மின்கம்பத்தில் கட்டிவைத்து சிறுவன் யஷ்வந்தை தாக்குவதை யாரோ ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதையறிந்த அப்பகுதி மக்கள், சிந்தாமணி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்