தட்சிண கன்னடாவில் 'நிபா' வைரஸ் பாதிப்பு இல்லை கலெக்டர் முல்லை முகிலன் தகவல்
தட்சிண கன்னடாவில் ‘நிபா’ வைரஸ் பாதிப்பு இல்லை என்று கலெக்டர் முல்லை முகிலன் தெரிவித்துள்ளார்.;
மங்களூரு-
தட்சிண கன்னடாவில் 'நிபா' வைரஸ் பாதிப்பு இல்லை என்று கலெக்டர் முல்லை முகிலன் தெரிவித்துள்ளார்.
நிபா வைரஸ் பாதிப்பு
கேரள மாநிலத்தில் 'நிபா' வைரஸ் பரவி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்புக்கு கோழிக்கோடு மாவட்டத்தை சேர்ந்த 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் சிலர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் நிபா வைரஸ் பரவி வருவதால் அண்டை மாநிலமான கர்நாடகத்தில் எல்லை பகுதியில் உஷார்படுத்தப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் கேரள எல்லையில் உள்ள மைசூரு, குடகு, சாம்ராஜ்நகர், தட்சிண கன்னடா ஆகிய பகுதியில் நிபா வைரஸ் பீதி இருந்து வருகிறது.
இதனால் எல்லையில் சோதனைச்சாவடி அமைத்து தீவிர கண்காணிப்பு பணி நடந்து வருகிறது. கேரளாவில் இருந்து வரும் வாகனங்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
ஆலோசனை கூட்டம்
இந்த நிலையில் தட்சிண கன்னடாவில் நிபா வைரஸ் மற்றும் டெங்கு காய்ச்சல் பரவலை தடுப்பது குறித்து மங்களூருவில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் முல்லை முகிலன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கலெக்டா் முல்லை முகிலன் பேசும்போது, தட்சிண கன்னடா மாவட்டத்தை பொறுத்தவரை நிபா வைரஸ் பாதிப்பு இல்லை.
டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இதனை தடுக்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆஸ்பத்திரிகளிலும் படுக்கைகளை தயாராக வைத்திருக்க வேண்டும். கழிவுநீர் தேங்கி கிடந்தால் உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். டெங்கு பாதிப்பு குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார்.
பயப்பட தேவையில்லை
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், தட்சிண கன்னடா மாவட்டத்தில் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை. இதனால் மக்கள் பயப்பட தேவையில்லை. மக்கள் தங்களை சுற்றியிருக்கும் இடத்தை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும்.
பறவைகள் கடித்த பழங்களை சாப்பிட வேண்டாம். கடையில் வாங்கி வரும் காய்கறி, பழங்களை சுத்தம் செய்த பிறகு பயன்படுத்த வேண்டும். யாருக்கும் உடல் நலக்குறைவு ஏற்பட்டால் உடனடியாக டாக்டரை சந்தித்து சிகிச்சை பெற வேண்டும் என்றார்.