கொலை, மிரட்டல் வழக்குகளில் தேடப்பட்ட தாதா புஜாரி; சீனாவில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தல்
பிரசாத்தின் தாயார் வித்தல் புஜாரியை மும்பை குற்ற பிரிவு போலீசார் கடந்த 2020-ம் ஆண்டில் கைது செய்தனர்.;
புனே,
இந்தியாவில் பல்வேறு கொலை மற்றும் மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட வழக்குகளில் தேடப்பட்டு வந்தவர் தாதா பிரசாத் புஜாரி. 2020-ம் ஆண்டு, மும்பை நகரை சேர்ந்த கட்டுமான நிறுவன அதிபரை பணம் கேட்டு, மிரட்டிய வழக்கிலும் தேடப்பட்டு வருகிறார்.
இந்த வழக்கில், பிரசாத்தின் தாயார் வித்தல் புஜாரியை மும்பை குற்ற பிரிவு போலீசார் கடந்த 2020-ம் ஆண்டில் கைது செய்தனர். ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டிய வழக்கில், சுனில் அங்கானே மற்றும் சுகேஷ் குமார் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.
தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்ட பிரசாத்துக்கு எதிராக, இன்டர்போல் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில், கடந்த ஆண்டு ஹாங்காங்கில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார். அவரை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன்படி, சீனாவில் இருந்து மும்பை நகருக்கு இன்று காலை விமானம் வழியே அவர் கொண்டு வரப்பட்டார்.
சத்ரபதி சிவாஜி மகாராஜா சர்வதேச விமான நிலையத்தில் விமானத்தில் வந்திறங்கிய அவரை, மும்பை குற்ற பிரிவு போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர்.
2019-ம் ஆண்டில் சிவசேனா தொண்டர் சந்திரகாந்த் ஜாதவ் என்பவர் மீது துப்பாக்கி சூடு நடத்தியது உள்ளிட்ட பல்வேறு குற்ற நடவடிக்கைகளில் தொடர்புடைய பிரசாத்திடம் தொடர்ந்து விசாரணை நடைபெற உள்ளது. அவரை நாடு கடத்த கடந்த ஆண்டு சீனா ஒப்புதல் அளித்தது.