பொதுமக்களிடம் மரம் வளர்ப்பு விழிப்புணர்வை ஏற்படுத்த டெல்லி நோக்கி சைக்கிள் பயணம்
ஒடிசாவில் இருந்து டெல்லி நோக்கி மரம் வளர்ப்பு பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த சஞ்சய் என்பவர் சைக்கிள் பயணம் மேற்கொண்டு உள்ளார்.
புவனேஸ்வர்,
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டு வெற்றி பெற்ற திரவுபதி முர்மு ஒடிசாவை சேர்ந்தவர். இந்நிலையில், ஒடிசாவின் பத்ரக் நகரில் இருந்து டெல்லியின் ரெய்சினா ஹில் நோக்கி சஞ்சய் குமார் பாண்டா என்பவர் சைக்கிள் பயணம் மேற்கொண்டு உள்ளார்.
பொதுமக்களிடையே மரம் வளர்ப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் அவர் இந்த பயணத்தில் ஈடுபட்டு வருகிறார். உலகம் முழுவதும் பருவகால மாற்றத்தினால் காட்டுத்தீ, வெப்பம் அதிகரிப்பு, கடல் மட்டம் உயருதல் உள்ளிட்ட நிகழ்வுகள் ஏற்பட்டு வருகின்றன.
எனினும், மரக்கன்றுகளை நட்டு வளர்க்கும்போது அதனால், சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஏற்படுவதுடன், காற்று மாசுபாடு குறைவது, மழை பொழிவு போன்ற பல பயனுள்ள விசயங்கள் நடைபெறும்.
இந்த சைக்கிள் பயணம் பற்றி சஞ்சய் கூறும்போது, நான் டெல்லி நோக்கி சைக்கிள் பயணம் செய்கிறேன். ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்திப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது. சாத்தியப்படும் வரை பொதுமக்கள் மரங்களை நட வேண்டும் என்ற செய்தியை கொண்டு சேர்க்க நான் விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.