பசுமையை இழந்து வரும் பெங்களூரு: வளர்ச்சி பணிகளுக்காக மரங்களை வெட்டுவதா?- பொதுமக்கள் எதிர்ப்பு

வளர்ச்சி பணிக்காக மரங்கள் தொடர்ந்து வெட்டப்படுவதால் பெங்களூரு தனது பசுமை பகுதியை இழந்து வருகிறது. இதனால் மரங்களை வெட்ட பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Update: 2022-10-10 20:42 GMT

பெங்களூரு:

பூங்கா நகரம்

பெங்களூரு நகருக்கு பூங்கா நகரம் என்ற பெயர் உண்டு. ஏனென்றால் இங்கு மரங்கள் உயரமாகவும், அகலமாகவும் வளர்ந்து பசுமை போர்த்திய போர்வையாக காணப்படுகிறது. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் குவிந்து கிடப்பதால், இதற்கு இந்தியாவின் சிலிக்கான் பள்ளத்தாக்கு என்ற அடைமொழியும் இருக்கிறது.

சர்வதேச நிறுவனங்கள், தேசிய அளவிலான நிறுவனங்கள் என தனியார் நிறுவனங்கள் குவிந்து கிடக்கின்றன. பெங்களூருவில் முதலீடுகள் செய்ய சர்வதேச அளவிலான நிறுவனங்கள் எப்போதும் ஆர்வம் காட்டுகின்றன.

இங்குள்ள சூழ்நிலை, அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள், குறைந்த சம்பளத்திற்கு திறன்மிக்க மனித வளம் கிடைப்பது போன்றவை அதற்கு காரணமாக உள்ளன. இதனால் பெங்களூரு அதிவேகமாக வளர்ந்து வருகிறது. பெங்களூருவின் அதிவேக வளர்ச்சிக்கு ஏற்ப போதுமான அளவுக்கு கர்நாடக அரசால் உள்கட்டமைப்பு வசதிகளை செய்து கொடுக்க முடியவில்லை.

வாகன பெருக்கம்

இதனால் போக்குவரத்து நெரிசல், மழைநீர் வடிகால் பிரச்சினை போன்ற பிரச்சினைகள் தலைதூக்கி இருக்கின்றன. கனமழை கொட்டிவிட்டால் நகரமே வெள்ளத்தில் தத்தளிக்கும் நிலை ஏற்படுகிறது. தினந்தோறும் வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி விழிபிதுங்கி நிற்கிறார்கள்.

இது வாகன நெரிசல் நகரின் வளர்ச்சிக்கு பெரும் சவாலாக உள்ளது. நகரின் மக்கள்தொகை 1.30 கோடியாக அதிகரித்துவிட்டது. அதே போல் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கர்நாடக அரசின் போக்குவலத்து ஆவணங்கள்படி பெங்களூருவில் 1 கோடி வாகனங்கள் ஓடுகின்றன. இதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது.

சாலை விரிவாக்க திட்டம்

ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு வாகனங்களில் சென்றடைவது என்பது குதிரை கொம்பாக உள்ளது. 10 நிமிடங்களில் கடக்க தூரத்தை வாகன நெரிசலில் சிக்கி 30 நிமிடங்கள் வரை ஆகிறது. இதனால் பெங்களூரு நகரவாசிகள் போக்குவரத்து நெரிலால் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். அலுவலகங்கள், கல்லூரிகளுக்கு செல்வோரின் நேரம் அதிகளவில் போக்குவரத்து நெரிசலில் வீணாகிறது.

இந்த போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண கர்நாடக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பூங்கா நகரமான பெங்களூருவில் சாலை விரிவாக்க திட்ட பணிகளால் போக்கு

வரத்து நெரிசலுக்கு தீர்வு காண அரசு முயற்சி செய்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சாலை விரிவாக்க திட்ட பணிகளுக்காக சாலையோரம் இருந்த ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டி அகற்றப்பட்டுள்ளன. மரங்களை அகற்றினால் மட்டுமே சாலைகளை மேம்படுத்த முடியும் என்ற நிலை உள்ளது.

பொதுநல வழக்குகள்

இன்னொருபுறம் மெட்ரோ ரெயில் திட்டங்களாலும் ஆயிரக்கணக்கான மரங்கள் அகற்றப்பட்டன. மரங்களை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக ஐகோர்ட்டில் பொதுநல வழக்குகள் தொடுக்கப்பட்டன. அந்த சந்தர்ப்பங்களில் ஐகோர்ட்டு, மரங்களை வெட்டும் எண்ணிக்கையை விட கூடுதலாக மரக்கன்றுகளை நட வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்டது.

ஒரு பகுதியில் உள்ள மரங்களை வெட்டிவிட்டு வேறு பகுதிகளில் மரக்கன்றுகளை நடுவதால் கிடைக்கும் பயன் என்பது குறைவு தான் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகிறார்கள். இதனால் மரங்களின் அடர்த்தி போய்விடுகிறது. இனி வரும் நாட்களில் சாலைகள் அகலப்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்பதால் மரங்கள் வெட்டப்படும் நிலை உள்ளது.

குளுகுளு சீதோஷ்ணநிலை

இந்த மரங்கள் வெட்டப்படுவதால் பெங்களூரு நகரின் பெருமையாக விளங்கிய குளுகுளு சீதோஷ்ணநிலை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை கோடையில் குறிப்பாக மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் வெயிலின் தாக்கம் குறைவாகவே காணப்படும். ஆனால் சமீப காலமாக கோடை வெயில் சுட்டெரிக்கிறது. தாங்க முடியாத அளவுக்கு வெயிலின் தாக்கம் இருப்பதாக நகரவாசிகள் கூறுகிறார்கள். இதே நிலை நீடித்தால் அடுத்த சில ஆண்டுகளில் பெங்களூரும் மற்ற நகரங்களை போல் வெப்ப நகரமாக மாறிவிடும் நிலை உள்ளது.

பெங்களூரு தனது பசுமை பகுதியை இழந்து வருவதால் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கவலை தெரிவித்து உள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் தங்களின் கருத்துகளை 'தினத்தந்தி'யுடன் பகிர்ந்து கொண்டனர்.

சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது

பெங்களூருவை சேர்ந்த கார்த்தியாயினி:- "பெங்களூருவில் 30 ஆண்டுகளுக்கு முன்பு மரங்கள் அடர்த்தியாக இருந்தன. சாலைகள் பசுமை போர்வையில் இருப்பது போல் காணப்பட்டன. ஆனால் நகரம் வேகமாக வளர்ச்சி அடைந்து வருவதால், சாலைகள் விரிவாக்கம், மேம்பாலம் கட்டுதல் போன்றவற்றால் மரங்களை வெட்டுகிறார்கள். இதனால் நகரின் பசுமைமயம் குறைந்து வருகிறது. மரங்களை வெட்டுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. அதிக எண்ணிக்கையில் மரக்கன்றுகளை நட்டு வளர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

சர்ஜாபுராவை சேர்ந்த சண்முகம் கூறியதாவது:- பெங்களூருவில் மரங்கள் நிறைந்து காணப்பட்டது. உலக அளவில் பெங்களூரு புகழ்பெற்று விளங்குகிறது. நகரின் வளர்ச்சிக்கு ஏற்ப திட்டங்களை செயல்படுத்துவது அவசியம். எனவே வளர்ச்சியை கருத்தில் கொண்டு மரங்களை அகற்றுவதை வரவேற்கிறேன். மரங்களை வெட்ட வேண்டும் என்ற நிலை இருந்தால், தற்போது நவீன எந்திரங்கள் மூலம் அவற்றை வேரோடு ெபயர்த்து எடுத்து வேறுபகுதியில் நடலாம். இல்லையெனில் புதிய மரக்கன்றுகளை நடலாம். மேலும் நகரில் பழமையான மரங்கள், மழைக்காலங்களில் சாய்ந்து விழும் நிலையே காணப்படுகிறது. எனவே அதுபோன்ற மரங்களையும் வெட்டி அகற்றிவிட்டு புதிய மரக்கன்றுகளை நடலாம். என்னை பொறுத்தவரை நமது வளர்ச்சிக்காக மரங்களை வெட்டப்படுகிறது. அதில் தவறு இல்லை. ஆனால் அதே அளவுக்கு மரக்கன்றுகளை நடவேண்டும்" என்றார்.

மரக்கன்று நடுவதில்லை

பெங்களூரு பசவேஸ்வராநகரை சேர்ந்த கே.சி.சிங், "பெங்களூரு வேகமாக வளர்ந்து வருகிறது. நகரமயமாவதை நான் எதிர்க்கவில்லை. சாலைகள் நமக்கு தேவை. அதற்காக மரங்களை வெட்டுகிறார்கள். ஆனால் ஒரு மரத்தை வெட்டினால் அதை ஈடுசெய்ய 3 மரக்கன்றுகள் நட வேண்டும் என்று விதிகள் சொல்கிறது.

ஆனால் அரசு இதை பின்பற்றுவது இல்லை. மரக்கன்றுகளை நடுவதில் இந்த அரசு அந்த அளவுக்கு ஆர்வம் காட்டவில்லை. அதனால் நாங்களே பல்வேறு பகுதிகளில் மரக்கன்றுகளை நட்டு வருகிறோம். மரங்கள் அதிகமாக வளர்க்கப்பட வேண்டும். அப்போது தான் நமக்கு நல்ல ஆக்சிஜன் கிடைக்கும்" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்