குடும்ப தகராறில் 3 குழந்தைகளை கிணற்றில் தள்ளி கொன்ற கொடூர தந்தை; மனைவியையும் கொல்ல முயற்சி
மங்களூருவில் குடும்ப தகராறில் 3 குழந்தைகளை கிணற்றில் தள்ளி கொன்ற கொடூர தந்தை கைது செய்யப்பட்டார். மனைவியையும் அவர் கொலை செய்ய முயன்றது தெரியவந்தது.;
மங்களூரு:
குடும்பத்தகராறு
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவில் முல்கி அருகே பத்மனூர் கிராமத்தை சேர்ந்தவர் சித்தேஷ் ஷெட்டி. இவர், பூ வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி லட்சுமி. பீடி சுற்றும் தொழிலாளி. இந்த தம்பதிக்கு ரஷ்மிதா (வயது 14) என்ற மகளும், உதய் (12), தட்ஷித் (4) ஆகிய 2 மகன்களும் இருந்தனர்.
இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
3 குழந்தைகள் கொலை
இந்த நிலையில் நேற்று மாலையும் கணவன்-மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து சித்தேஷ், தனது 3 பிள்ளைகளையும் வீட்டின் அருகே உள்ள கிணற்றுக்கு அழைத்து சென்றார். பின்னர், பெற்ற பிள்ளைகள் என்றும் பாராமல் சித்தேஷ் 3 குழந்தைகளையும் கிணற்றில் தூக்கி வீசினார்.
இதில் 3 குழந்தைகளும் பரிதாபமாக உயிரிழந்தன. இதுபற்றி அறிந்ததும் லட்சுமி, கிணற்றின் அருகே சென்று பிணமாக மிதந்த தனது குழந்தைகளை பார்த்து கதறி அழுதார். அப்போது சித்தேஷ், லட்சுமியையும் கிணற்றில் தள்ளி கொலை செய்ய முயன்றுள்ளார். அக்கம்பக்கத்தினர் லட்சுமியை காப்பாற்றினர்.
தந்தை கைது
இதுபற்றிய தகவல் அறிந்ததும் முல்கி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார் தீயணைப்பு படையினர் உதவியுடன் கிணற்றில் கிடந்த 3 குழந்தைகளின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்த போலீசார் நடத்திய விசாரணையில், மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் 3 குழந்தைகளை கிணற்றில் தள்ளி கொன்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சித்தேசை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.