தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கு முன் மக்களின் மனங்களை வெல்வது அவசியம்: பிரதமர் மோடி பேச்சு

பொய்யான வாக்குறுதிகளால் எதனையும் பெற முடியாது என சில அரசியல் கட்சிகள் புரிந்து கொள்வதில்லை என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.

Update: 2023-12-09 09:27 GMT

புதுடெல்லி,

மத்திய அரசின் திட்டங்கள் நாட்டு மக்களுக்கு சென்று சேரும் வகையில், பிரதமர் மோடியால் கடந்த நவம்பர் மாதம் விக்சித் பாரத் சங்கல்ப யாத்திரை தொடங்கி வைக்கப்பட்டது. மோடி அரசின் 9 ஆண்டு கால பணியை மக்களிடம் எடுத்து செல்வது மற்றும் வருகிற ஆண்டுகளுக்கு தயாராவது ஆகிய திட்டத்தின்படி இந்த யாத்திரை மேற்கொள்ளப்படுகிறது.

அரசின் இந்த திட்டங்களை பெற தகுதி வாய்ந்த, ஆனால் பலனடையாத பயனாளிகளை திட்டங்கள் சென்றடையும் நோக்கத்தில் நாடு முழுவதும் இதற்கான நிகழ்ச்சி நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதன்படி, விக்சித் பாரத் சங்கல்ப யாத்திரை என்ற பெயரிலான நிகழ்ச்சியில் பிரதமர் மோடி காணொலி காட்சி வழியே இன்று கலந்து கொண்டு பயனாளிகளுடன் உரையாடினார்.

இந்த நிகழ்ச்சியில் நாடு முழுவதுமுள்ள ஆயிரக்கணக்கான பயனாளிகள் இணைந்தனர். மத்திய மந்திரிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் உள்ளூர் பிரதிநிதிகள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில், நாடு முழுவதும் விக்சித் பாரத் சங்கல்ப யாத்திரைக்கான 2 ஆயிரம் வேன்கள், கிரிஷி விக்யான் மையங்கள் மற்றும் பொது சேவை மையங்கள் ஆகியவையும் இணைந்தன.

பிரதமர் மோடி நிகழ்ச்சியில் பேசும்போது, நம்முடைய அரசின் சில திட்டங்கள் அல்லது வேறு திட்டங்களால், நாட்டிலுள்ள கிராமங்களில் உள்ள கோடிக்கணக்கான குடும்பங்கள் நிச்சயம் பயன் பெற்றுள்ளன.

இந்த பலனை யார் பெறுகிறாரோ, அவருடைய நம்பிக்கை அதிகரிக்கிறது. வாழ்க்கையை வாழ்வதற்கான ஒரு புதிய பலமும் வந்து சேருகிறது என பேசியுள்ளார்.

இந்த நாட்டின் ஒவ்வோர் ஏழையும் எனக்கு மிக முக்கிய நபரே (வி.ஐ.பி.யே). சமீபத்தில் சட்டசபை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. மோடியின் உத்தரவாதம் மீது மக்களுக்கு நம்பிக்கை உள்ளது என அந்த முடிவுகள் காட்டுகின்றன.

எனது உத்தரவாதம் மீது நம்பிக்கை வைத்த அனைவருக்கும் நான் நன்றியுடையவனாக இருக்கிறேன். பொய்யான வாக்குறுதிகளால் எதனையும் பெற முடியாது என சில அரசியல் கட்சிகள் புரிந்து கொள்வதில்லை என்று அவர் பேசியுள்ளார். தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கு முன் மக்களின் மனங்களை வெல்வது அவசியம் என்றும் பிரதமர் மோடி பேசியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்