இறைச்சிக்காக லாரியில் கடத்திய 15 மாடுகள் மீட்பு
பிளிகெரே அருகே இறைச்சிக்காக லாரியில் கடத்திய 15 மாடுகள் மீட்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உன்சூர்:
பிளிகெரே அருகே இறைச்சிக்காக லாரியில் கடத்திய 15 மாடுகள் மீட்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வாகன சோதனை
மைசூரு மாவட்டம் உன்சூர் தாலுகா பிளிகெரே பகுதியில் லாரியில் மாடுகள் கடத்தி செல்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் பிளிகெரே போலீசார் மைசூரு-உன்சூர் நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை தடுத்து நிறுத்தினர். பின்னர் லாரியில் இருந்த 2 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்ேபாது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் லாரியில் சோதனையிட்டனர்.
15 மாடுகள் மீட்பு
அப்போது லாரியில் வாய்கள் கட்டப்பட்ட நிலையில் 15 மாடுகள் இருந்தன. இதுதொடர்பாக அவர்களிடம் போலீசார் விசாரிக்க முயன்றனர். அப்போது அவர்கள் 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடினர். இதனை சுதாரித்து கொண்ட போலீசார், அவர்களை விரட்டி சென்றனர். மேலும் ஒருவரை சுற்றி வளைத்து பிடித்தனர். மற்றொருவர் தப்பி ஓடிவிட்டார்.
பிடிபட்டவரிடம் நடத்திய விசாரணையில், அவர் பிரியப்பட்டணா தாலுகா அலக்கனஹள்ளி கிராமத்தை சேர்ந்த அலி மன்சூர் (வயது 35) என்பதும், உன்சூரில் இருந்து பிளிகெரேவுக்கு இறைச்சிக்காக மாடுகளை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 15 மாடுகளை போலீசார் மீட்டு கோசாலைக்கு அனுப்பி வைத்தனர். லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து பிளிகெரே போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடியவரை வலைவீசி தேடி வருகிறார்கள்.