வனப்பகுதியில் ரெயில்கள் வேகமாக செல்வதாக பொதுநல வழக்கு: கர்நாடக வனத்துறைக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்
வனப்பகுதியில் ரெயில்கள் வேகமாக செல்வது குறித்து பதில் அளிக்க கர்நாடக வனத்துறைக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ் வழங்கி உள்ளது. இன்னும் 2 வாரங்களுக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது.;
பெங்களூரு:
பொதுநல மனு
பெங்களூருவை சேர்ந்த கிரிதர் குல்கர்னி என்பவர் கர்நாடக ஐகோர்ட்டில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்துள்ளார். அதில், மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அடர்ந்த வனப்பகுதியில் ஒசபேட்டை-வாஸ்கோ, லோண்டா-மிராஜ் வழித்தடங்களில் ரெயில்கள் இரவில் அதிவேகமாக செல்கின்றன.
இரவு நேரங்களில் வனவிலங்குகள் ரெயிலில் மோதி உயிரிழப்பதை தடுக்க இரவு நேரத்தில் வனப்பகுதி வழியாக செல்லும் ரெயில்களின் வேகத்தை குறைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டாலும், இந்த வழித்தடங்களில் ரெயில்கள் அதிவேகமாக இயக்கப்படுகின்றன.
கடந்த 2014-ம் ஆண்டு முதல் அந்த வழித்தடங்களில் 2 யானைகள், 49 காட்டெருமைகள், 5 மான்கள், ஒரு காட்டு பன்றி உள்பட 60 வனவிலங்குகள் இரவு நேரத்தில் ரெயிலில் அடிப்பட்டு உயிரிழந்துள்ளன.
விசாரணை
பலமுறை கோரிக்கை விடுத்தும் ரெயிலின் வேகத்தை குறைக்க ரெயில்வே எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை மீறுவதாகும். எனவே இந்த வழித்தடங்களை கைவிட்டு, பெலகாவி மற்றும் தார்வார் பகுதியில் மாற்று ரெயில் பாதை அமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று அதில் கூறப்பட்டு இருந்தது.
இந்த வழக்கு நேற்று தலைமை நீதிபதி பி.பி.வரலே, நீதிபதி அசோக் எஸ்.கினகி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வாதிட்ட அரசு தரப்பு வக்கீல், ரெயில்வே அதிகாரிகளுக்கும், வனத்துறை அதிகாரிகளுக்கும் இடையே அவ்வப்போது கூட்டம் நடந்து வருவதாகவும், இதுபற்றி விவாதிப்பதாகவும் கூறினார்.
நோட்டீஸ்
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், பெலகாவி வனத்துறை அதிகாரி, ஹலியால், தார்வார் சரக வனத்துறை அதிகாரிகள், காளி புலிகள் காப்பக இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக இன்னும் 2 வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.