ராகுல் காந்தியை குற்றவாளி என கூறியது கோர்ட்டு; மத்திய அரசு அல்ல: அசாம் முதல்-மந்திரி

ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிரான அவதூறு பேச்சுக்காக ராகுல் காந்தியை குற்றவாளி என கூறியது கோர்ட்டு என்றும் மத்திய அரசுக்கு இதில் தொடர்பில்லை என அசாம் முதல்-மந்திரி கூறியுள்ளார்.;

Update:2023-03-25 13:12 IST


கவுகாத்தி,


காங்கிரசின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி, கர்நாடகாவின் கோலார் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரலில் நடந்த மக்களவை தேர்தல் பிரசாரத்தின்போது, பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக அவருக்கு எதிராக அவதூறு வழக்கு தொடரப்பட்டது.

இதில், சூரத் நீதிமன்றம் அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. அவதூறு வழக்கில் கேரளாவின் வயநாடு தொகுதி எம்.பி.யாக நீடித்து வந்த ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், எம்.பி. பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்படுவதாக மக்களவை செயலகம் அறிவித்தது.

இந்த நடவடிக்கைக்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த சூழலில், அசாம் முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா செய்தியாளர்கள் சந்திப்பில் இன்று பேசும்போது, ராகுல் காந்தியை மத்திய அரசு தகுதி நீக்கம் செய்யவில்லை.

அவரை குற்றவாளி என கூறியது நீதிமன்றம். ஏனெனில், ஓ.பி.சி. சமூகத்திற்கு எதிராக நாடாளுமன்றத்தில் பயன்படுத்த தகுதியற்ற வார்த்தைகளை அவர் பயன்படுத்தி உள்ளார்.

இதன் தொடர்ச்சியாக கோர்ட்டு அறிவித்ததன் பேரில், ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். இது ஒரு நீதிமன்ற நடைமுறை. இதில், அரசியலுக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்