தக்காளி விளைச்சல் பாதிப்பால் நஷ்டம்; தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை

தக்காளி விளைச்சலில் நஷ்டம் ஏற்பட்டதால் தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.;

Update: 2023-10-06 22:15 GMT

துமகூரு:

துமகூரு மாவட்டம் பாவகடா தாலுகா ரூப்பா கிராமத்தை சேர்ந்தவர் மனு (வயது 26). விவசாயி. இவரது மனைவி பவித்ரா (24). இந்த தம்பதிக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. அவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. மனு பலரிடம் கடன் வாங்கி தனது விவசாய நிலத்தில் தக்காளி சாகுபடி செய்து இருந்தார். ஆனால் போதிய மழை ெபய்யாததால் தக்காளி செடிகள் வாடின. இதனால் விளைச்சல் பாதிக்கப்பட்டது. இதனால் வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வந்தார். இதனால் மனுவும், அவரது மனைவி பவித்ராவும் மனமுடைந்து காணப்பட்டனர்.

இந்த நிலையில், கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்த மனுவும், பவித்ராவும் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தனர். அதன்படி, தங்கள் மகளை பவித்ராவின் பெற்றோர் வீட்டில் விட்டுவிட்டு சென்றனர். பின்னர் தங்கள் வீட்டுக்கு வந்து 2 பேரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் பாவகடா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார் 2 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டதால் மனமுடைந்து தம்பதி தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதுகுறித்து பாவகடா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்