சிக்கமகளூருவில் சங்கிலி தொடர் விபத்தில் தம்பதி சாவு

சிக்கமகளூருவில் சங்கிலி தொடர் விபத்தில் தம்பதி உயிரிழந்தனர். அவர்களது 14 மாத பெண் குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது.

Update: 2023-09-13 18:45 GMT

சிக்கமகளூரு-

சிக்கமகளூருவில் சங்கிலி தொடர் விபத்தில் தம்பதி உயிரிழந்தனர். அவர்களது 14 மாத பெண் குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது.

2 பேர் சாவு

சிக்கமகளூரு மாவட்டம் சக்கராயப்பட்டணா அருகே இரேகவுஜா பகுதியில் கடூர் சாலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது பின்னால் வந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக லாரியின் பின்புறம் பயங்கரமாக மோதியது. அத்துடன் காரின் பின்புறம் பின்னால் வந்த மோட்டார் சைக்கிளும் மோதியது. இந்த சங்கிலி தொடர் விபத்தில் காரின் முன்பகுதி அப்பளம் போல நொறுங்கியது.

மேலும், மோட்டார் சைக்கிளில் வந்த பெண் உள்பட 2 பேர் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் அவர்களுடன் வந்த குழந்தை லேசான காயத்துடன் உயிர் தப்பியது. காரில் வந்தவர்களும் லேசான காயம் அடைந்தனர்.

தம்பதி

இந்த விபத்தை பார்த்த அந்தப்பகுதியை சேர்ந்தவர்கள் விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு குழந்தை உள்பட காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் சக்கராயப்பட்டணா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார், பலியான 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், பலியானது சிவமொக்காவை சேர்ந்த சையத் ஆசீப் (வயது 38), அவரது மனைவி மஜியா (33) என்பதும், அவர்களது 14 மாத பெண் குழந்தை லேசான காயத்துடன் உயிர் தப்பியதும் தெரியவந்தது.

போலீஸ் விசாரணை

இந்த விபத்து குறித்து சக்கராயப்பட்டணா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்