மேகாலயாவில் நாளை வாக்கு எண்ணிக்கை; பெரும்பான்மை பெறுவோம் என சங்மா நம்பிக்கை

மேகாலயாவில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், பெரும்பான்மை பெறுவோம் என தேசிய மக்கள் கட்சி தலைவர் சங்மா நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

Update: 2023-03-01 16:58 GMT


துரா,


60 உறுப்பினர்களை கொண்ட மேகாலயா சட்டசபை தொகுதிக்கான தேர்தல் கடந்த பிப்ரவரி 27-ந்தேதி நடந்து முடிந்தது. இதில், தேசிய மக்கள் கட்சி (என்.பி.பி.) தலைவர்களில் ஒருவர் மற்றும் முதல்-மந்திரியான கன்ராட் சங்மா தெற்கு துரா தொகுதியில் இருந்து போட்டியிட்டு உள்ளார்.

இந்நிலையில், கட்சி தலைவர் ஜே.டி. சங்மா கூறும்போது, நாங்கள் கடுமையாக உழைத்து உள்ளோம். காசி மற்றும் ஜைந்தியா ஹில்ஸ் பகுதியில் குறைந்தது 15 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. மேகாலயாவில் மொத்தம் 31 முதல் 32 தொகுதிகளை கைப்பற்றுவோம். கொண்டாட்டங்களுக்கு நாங்கள் தயாராகி கொண்டிருக்கிறோம் என கூறியுள்ளார்.

ஆளும் கூட்டணியில் என்.பி.பி. மற்றும் பா.ஜ.க. என இரண்டு கட்சிகளும் இருந்தபோதும், தேர்தலில் அவை தனித்தனியாகவே போட்டியிட்டன.

இந்நிலையில், பா.ஜ.க.வை சேர்ந்த அசாம் முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வாவை, சங்மா நேற்றிரவு நேரில் சந்தித்து அரை மணிநேரம் வரை பேசினார். எனினும், மேகாலயா தேர்தலில் தொங்கு சட்டசபை அமைய கூடும் என தேர்தலுக்கு பின்னான கருத்து கணிப்புகள் தெரிவித்து உள்ளன.

இந்த சூழலில், மேகாலயாவில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. இதேபோன்று, நாகலாந்து மற்றும் திரிபுரா சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையும் நாளை நடைபெற உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்