ஆண்டர்சன்பேட்டை மார்க்கெட்டில் கவுன்சிலர், நகரசபை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை
ஆண்டர்சன்பேட்டை மார்க்கெட்டில் குவிந்து கிடக்கும் குப்பை கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கவுன்சிலர், நகரசபை நிர்வாகிகளுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.;
கோலார் தங்கவயல்
குப்பை கழிவுகள்
கோலார் தங்கவயல் நகரசபைக்குட்பட்ட ஆண்டர்சன்பேட்டை 33-வது வார்டு பகுதியில் மார்க்கெட் ஒன்று உள்ளது. இந்த மார்க்கெட்டிற்கு தினமும் ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர். இந்தநிலையில் கடந்த சில நாட்களாக மார்க்கெட் பகுதியில் குப்பைகள் குவிந்து காணப்படுகிறது.
இந்த குப்பை கழிவுகளால் பொதுமக்களுக்கு சுவாச கோளாறும் மற்றும் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இந்தநிலையில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் இந்த குப்பைகளை அகற்றும்படி வார்டு கவுன்சிலர் சிவாஜிக்கு தகவல் அளித்தனர்.
அவர் பொதுமக்களின் கோரிக்கைக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் பொதுமக்கள் தரப்பில் அவருக்கு தொடர்ந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டது.
இதனால் அவர் நகரசபை நிர்வாகளை அழைத்து குப்பைகளை அகற்றும்படி உத்தரவிட்டார். ஆனால் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
நகரசபை நடவடிக்கை எடுக்கவேண்டும்
இது குறித்து கவுன்சிலர் சிவாஜி கூறுகையில், வார்டு பகுதிகளில் குப்பைகளை அகற்றுவது நகரசபையின் பொறுப்பு. தூய்மை பணியாளர்களை வைத்து அந்த குப்பைகளை அகற்றவேண்டும்.
ஆண்டர்சன்பேட்டை மார்க்கெட் பகுதியில் உள்ள குப்பைகளை அகற்றும்படி நகரசபை அதிகாரிகளுக்கு பல முறை உத்தரவிட்டுள்ளேன். ஆனால் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் பொதுமக்களிடம் என்னால் பதில் கூற முடியவில்லை. தொடர்ந்து சுகாதா சீர்கேடு ஏற்பட்டு, பலர் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது.
அவர்களுக்கு நகரசபையிடம் என்ன பதில் இருக்கிறது. இந்த குப்பைகள் அகற்றும் விஷயத்தில் அரசியல் வேண்டாம். நகரசபை நிர்வாகிகள் பாராபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.