விநாயகர் சிலைகள் வைத்து வழிபட மாநகராட்சி அனுமதி கட்டாயம்- பெங்களூரு போலீஸ் கமிஷனர் உத்தரவு

பெங்களூருவில் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபடுவதற்கு மாநகராட்சியிடம் அனுமதி பெறுவது கட்டாயம் என்று போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

Update: 2022-08-27 22:07 GMT

பெங்களூரு: பெங்களூருவில் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபடுவதற்கு மாநகராட்சியிடம் அனுமதி பெறுவது கட்டாயம் என்று போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

போலீஸ் கமிஷனர் ஆலோசனை

பெங்களூருவில் வருகிற 31-ந் தேதி விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி எடுக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பெங்களூருவில் போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி உயர் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் கூடுதல் போலீஸ் கமிஷனர்கள், துணை கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.

குறிப்பாக ஈத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடினால், அங்கு சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படாத வண்ணம் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை எடுக்க வேண்டும் என்று போலீசாருக்கு, பிரதாப் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். அசம்பாவிதங்கள் நடைபெறாத வண்ணம் பெங்களூரு நகர் முழுவதும் முன் எச்சரிக்கையாக பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தும்படியும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

மாநகராட்சி அனுமதி கட்டாயம்

இந்த ஆலோசனை கூட்டம் முடிந்ததும் பெங்களூருவில் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபடுவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி உத்தரவிட்டு இருக்கிறார். மேலும் பெங்களூருவுக்கு என்று தனி வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டு இருக்கிறது. அதன்படி, பெங்களூருவில் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழபட்டால், அதற்கு மாநகராட்சியிடம் இருந்து கண்டிப்பாக அனுமதி பெற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

அதாவது முறையான மனுக்களை மாநகராட்சியிடம் கொடுத்து, அனுமதி பெற வேண்டும். விநாயகர் சிலைகள் வைக்கப்படும் பகுதிகளில், அப்பகுதியில் வசிப்போருக்கும், வாகன போக்குவரத்துக்கும் எந்த விதமான தொந்தரவும் ஏற்படக்கூடாது. விநாயகா் சிலை வைக்கும் பகுதியில் சாமியானா பந்தல் வைத்து கொள்ளலாம். அதற்கு அருகில் பிளக்ஸ், பேனர்கள் வைத்தால், அதற்கு மாநகராட்சியிடம் முறையான அனுமதி பெறுவது கட்டாயமாகும்

பொதுமக்களுக்கு தொந்தரவு...

எக்காரணத்தை கொண்டும் சர்ச்சையை ஏற்படுத்தும் இடத்தில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுவதற்கு அனுமதி கிடையாது. தனியாருக்கு சொந்தமான பகுதிகளில் வைத்தால், அங்கு சம்பந்தப்பட்ட நபர்களின் அனுமதியை பெற்றிருக்க வேண்டும். சிலை வைக்கப்படும் பகுதியில் ஏதேனும் பிரச்சினை ஏற்படாத வண்ணம், நிர்வாகிகள் கவனிக்க வேண்டும்.

சிலை வைக்கும் பகுதிகளில் 24 மணிநேரமும் ஒரு நபர் கண்டிப்பாக இருக்க வேண்டும். எக்காரணத்தை கொண்டும் பொதுமக்களுக்கு தொந்தரவு கொடுக்க கூடாது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்