ஈஜிபுரா மேம்பால பணிகளை முடிக்க ரூ.144 கோடியில் புதிய டெண்டருக்கு மாநகராட்சி அழைப்பு
ஈஜிபுரா மேம்பால பணிகளை முடிக்க ரூ.144 கோடியில் புதிய டெண்டருக்கு மாநகராட்சி அழைப்பு விடுத்து உள்ளது.;
பெங்களூரு:
ஈஜிபுரா மேம்பாலம்
பெங்களூரு கோரமங்களா கேந்திரிய சதான்-ஈஜிபுரா சந்திப்பை இணைக்கும் வகையில் 2½ கிலோ மீட்டர் தூரத்திற்கு மேம்பாலம் அமைக்க கடந்த 2017-ம் ஆண்டு மாநகராட்சி ஒரு கட்டுமான நிறுவனத்திற்கு ரூ.204 கோடிக்கு டெண்டர் கொடுத்து இருந்தது. மேம்பால பணிகளை 2019-க்குள் முடிக்கவும் உத்தரவிடப்பட்டு இருந்தது. ஆனால் மேம்பாலம் அமைக்கும் பணியை டெண்டர் எடுத்த கட்டுமான நிறுவனம் ஆமை வேகத்தில் மேற்கொண்டது.
2019-ம் ஆண்டு வரை அந்த கட்டுமான நிறுவனம் 47 சதவீத பணிகளை மட்டுமே முடித்து இருந்தது. பணிகள் ஆமை வேகத்தில் நடந்ததால் ஈஜிபுரா சந்திப்பு பகுதியில் போக்குவரத்து நெரிசல் உண்டானது. ஆனாலும் மேம்பால பணிகளை முடிக்க அந்த கட்டுமான நிறுவனத்திற்கு, மாநகராட்சி கூடுதலாக ஒரு ஆண்டு காலஅவகாசம் வழங்கியது.
புதிய டெண்டருக்கு அழைப்பு
அப்போதும் பாலம் கட்டும் பணியை அந்த கட்டுமான நிறுவனம் சரியாக மேற்கொள்ளவில்லை. இதனால் கடந்த 2022-ம் ஆண்டு கர்நாடக ஐகோர்ட்டு வழிகாட்டுதலின்பேரில் கட்டுமான நிறுவனத்திற்கு வழங்கிய டெண்டரை மாநகராட்சி ரத்து செய்தது. இந்த நிலையில் ஈஜிபுரா மேம்பால பணிகளை முடிக்க ரூ.144 கோடியில் புதிய டெண்டருக்கு மாநகராட்சி அழைப்பு விடுத்து உள்ளது.
டெண்டர் பணிகள் முடிந்த பின்னர் மேம்பால பணிகள் தொடங்கும் என்றும், அடுத்த ஆண்டிற்குள் இந்த மேம்பால பணிகள் முடிவடையும் என்றும் மாநகராட்சி அதிகாரிகள் கூறியுள்ளனர். ஆனால் மேம்பால பணி எப்போது தான் முடிகிறது என்று பார்ப்போம் என்று கூறி நொந்து கொள்கின்றனர் வாகன ஓட்டிகள்.