கொரோனா நமக்கு மிகப்பெரிய பாடத்தை கற்று கொடுத்தது

கொரோனா நமக்கு மிகப்பெரிய பாடத்தை கற்று கொடுத்தது என்று சட்டசபையில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.

Update: 2023-02-25 06:45 GMT

பெங்களூரு, 

நெருக்கடி நிலைகள்

கர்நாடக சட்டசபையில் கடைசி நாள் கூட்டத்தில் முதல்-மந்திரி பவசராஜ் பொம்மை பேசும்போது கூறியதாவது:-

இந்த சட்டசபையில் தலித் மற்றும் பழங்குடியின சமூகங்களுக்கு இட ஒதுக்கீட்டை உயர்த்தும் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. இது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க முடிவு ஆகும். இதற்காக எங்கள் அரசு ஒரு திடமான அடியை எடுத்து வைத்தது. இந்த விஷயத்தில் வரும் காலத்தில் பிற மாநிலங்களும் நமது பாதையை பின்தொடரும். இந்த ஆட்சி காலத்தில் எப்போதும் சந்திக்காத நெருக்கடி நிலைகளை சந்தித்தோம்.

கொரோனா காலத்தில் முககவசம் போட்டு கொண்டு சபைக்கு வந்தோம். சபையில் தடுப்பு கவச கண்ணாடி போட்டு சபையை நடத்தினோம். இது நமது வாழ்க்கையில் மறக்க முடியாத நாட்கள். கொரோனா நெருக்கயில் நம்மை பயம் சூழ்ந்து கொண்டது. அப்போது டாக்டர்கள், மருத்துவ நிபுணர்கள், விஞ்ஞானிகள் நம்மை வழிநடத்தினர். விஞ்ஞானிகள் விரைந்து ஆராய்ச்சி செய்து, தடுப்பூசியை கண்டுபிடித்தனர்.

பொருளாதார வளர்ச்சி

கொரோனா நமக்கு மிகப்பெரிய பாடத்தை கற்று கொடுத்தது. ஒருபுறம் கொரோனா, இன்னொருபுறம் வெள்ளம் ஏற்பட்டது. இவற்றை சிறப்பான முறையில் எதிர்கொண்டு நிலையை சமாளித்தோம். ஒரு நாடு சுதந்திரம் அடைவதும், அதன் பிறகு பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவதும் சுலபமான விஷயமல்ல. மகாத்மா காந்தி, அம்பேத்கர், நாட்டின் முதல் பிரதமரின் தொலைநோக்கு பார்வையால் அடித்தளம் அமைத்தனர்.

சிறந்த அரசியல் சாசனத்தால் தான் நாடு வளர்ச்சி கண்டுள்ளது. ஒருங்கிணைந்த கர்நாடகத்தை உருவாக்க பலர் போராடினர். முன்னாள் முதல்-மந்திரி கெங்கல் ஹனுமந்தய்யா கர்நாடகத்தின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றினார். 15-வது சட்டசபை வெற்றிகரமான முறையில் நடத்தப்பட்டதற்கு   சபாநாயகர் காகேரி முக்கிய காரணம்.

அரசியலில் உயர்ந்தவர்

எதிர்க்கட்சி உறுப்பினர்களும் ஆதரவு வழங்கினர். புதிதாக சபைக்கு வந்தவர்களும் இங்கு அனுபவத்துடன் வெளியே செல்கிறார்கள். குமார் பங்காரப்பா, ராஜீவ் போன்றவர்கள் தங்களின் சிறந்த பேச்சு மூலம் இந்த சபையின் கவனத்தை ஈர்த்தனர். குமாரசாமி ஏழைகளின் குரலாக பேசினார். எடியூரப்பா போராட்டங்கள் மூலம் அரசியலில் உயர்ந்தவர். அவர் முதல்-மந்திரியாக இருந்தபோது விவசாய பட்ஜெட் தாக்கல் செய்தார். அவர் விவசாயிகளின் நலனில் அதிக அக்கறை செலுத்தினார்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்