சென்னை வந்த கோரமண்டல் விரைவு ரயில் ஒடிசாவில் சரக்கு ரயிலுடன் மோதி விபத்து- மீட்பு பணிகள் தீவிரம்

கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஒடிசா மாநிலத்தில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2023-06-02 14:38 GMT

புவனேஷ்வர்,

கோரமண்டல் விரைவு ரயில் ஒடிசா மாநிலம் பலாஷோர் அருகே  சரக்கு ரயிலுடன் மோதியதில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.. இந்த விபத்தில் உயிரிழப்பு  ஏற்பட்டு இருக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது.  விபத்தில் காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.  எனினும் ரயில் விபத்து பற்றிய முழுமையான தகவல் எதுவும் இதுவரை  வெளியாகவில்லை.

ரயிலின் 8 பெட்டிகள் வரை தடம் புரண்டதாகவும் போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகள் நடைபெறுவதாகவும் தகவல்கள் கூறுகின்றன. கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் கொல்கத்தாவில் இருந்து சென்னை வரை இயக்கப்படுகிறது. வனப்பகுதியில் இந்த விபத்து நடைபெற்று இருப்பதாகவும் இரவு நேரம் என்பதால் கடும் சிரமங்களுக்கு இடையே மீட்பு பணிகள் நடப்பதாகவும் பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.  தேசிய பேரிடர் மீட்பு படையினர் விபத்து நடைபெற்ற இடத்திற்கு விரைந்துள்ளனர்.கவிழ்ந்து கிடக்கும்  ரயிலுக்குள் இருந்து காயம் அடைந்த பயணிகள் மீட்கப்படும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. 50 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து இருக்கலாம் எனவும்  சில செய்தி தொலைக்காட்சிகள்  செய்தி வெளியிட்டுள்ளன. 

Tags:    

மேலும் செய்திகள்