கொரோனா பூஸ்டர் டோசாக 'கார்பேவாக்ஸ்' தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி
கொரோனாவுக்கு எதிராக 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசியாக ‘கார்பேவாக்ஸ்’ தடுப்பூசியை போடுவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.;
'கார்பேவாக்ஸ்' தடுப்பூசி
ஐதராபாத்தைச் சேர்ந்த பயாலஜிக்கல்-இ நிறுவனத்தார், கொரோனாவுக்கு எதிராக 'கார்பேவாக்ஸ்' என்ற தடுப்பூசியை உருவாக்கி உள்ளனர்.
இந்த தடுப்பூசியை 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசியாக (முன் எச்சரிக்கை டோஸ் தடுப்பூசி) செலுத்துவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கோரி இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகத்திடம் பயாலஜிக்கல்- இ நிறுவனத்தார் விண்ணப்பித்தனர்.
அதைத் தொடர்ந்து இந்த தடுப்பூசியின் பரிசோதனை தரவுகளையும் வழங்கினர்.
இந்த தடுப்பூசியை 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசியாக செலுத்த அனுமதிக்கலாம் என்று தொழில்நுட்பக்குழு பரிந்துரை செய்தது.
மத்திய அரசு அனுமதி
இதை மத்திய அரசின் சார்பில் பரிசீலித்த இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம், 'கார்பேவாக்ஸ்' தடுப்பூசியை 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசியாக செலுத்துவதற்கு நேற்று அனுமதி அளித்துள்ளது.
2-வது டோஸ் தடுப்பூசியாக கோவேக்சின் அல்லது கோவிஷீல்டு தடுப்பூசியை செலுத்தி, 6 மாதங்கள் ஆனவர்கள் இந்த 'கார்பேவாக்ஸ்' தடுப்பூசியை பூஸ்டர் டோஸ் தடுப்பூசியாக செலுத்திக்கொள்ளலாம்.
இதையொட்டி பயாலஜிக்கல்-இ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மகிமா தட்லா கூறும்போது, "இந்த அனுமதியால் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். இது இந்தியாவில் கொரோனா வைரசுக்கு எதிரான பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகளின் தேவையை பூர்த்தி செய்யும். நாங்கள் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி பயணத்தில் மற்றொரு மைல் கல்லைக் கடந்துள்ளோம். இந்த அனுமதியானது, மீண்டும் ஒரு முறை நீடித்த, உலகத்தரம் வாய்ந்த பாதுகாப்பு தரங்களை கார்பேவாக்ஸ் தடுப்பூசி கொண்டிருப்பதையும், அதன் அதிகபட்ச நோய் எதிர்ப்பு திறனையும் பிரதிபலிக்கிறது" என கூறி உள்ளார்.
விலை என்ன?
'கார்பேவாக்ஸ்' தடுப்பூசி ஒரு டோஸ் விலை ரூ.840 என முதலில் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் பின்னர் இந்த விலை ரூ.250 என (ஜி.எஸ்.டி. உள்பட) குறைக்கப்பட்டது. அதே நேரத்தில் சேவை கட்டணம் உள்ளிட்டவை சேர்த்து பயனாளிகள் ரூ.400 செலுத்தி, தனியார் தடுப்பூசி மையங்களில் போட்டுக்கொள்ளலாம் என தகவல்கள் கூறுகின்றன.
இந்த தடுப்பூசி இந்தியாவின் முதல் பன்முகத்தன்மை கொண்ட பூஸ்டர் தடுப்பூசி என்ற பெயரைப் பெறுகிறது.
இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் 10-ந் தேதி முதல் 18 வயதானோருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி, தனியார் தடுப்பூசி மையங்களில் போடப்படுவது குறிப்பிடத்தக்கது.