போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டரை துப்பாக்கியால் சுட்ட சப்-இன்ஸ்பெக்டர்...!
இன்ஸ்பெக்டர் மீது சப்-இன்ஸ்பெக்டர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார்.;
போபால்,
மத்தியபிரதேச மாநிலம் ரிவா மாவட்டம் சிவில் லைன் பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்தில் ஹிடேந்திர நாத் சர்மா (வயது 40) இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். அதே போலீஸ் நிலையத்தில் பி.ஆர். சிங் (வயது 52) சப்-இன்ஸ்பெக்டகராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், போலீஸ் நிலையத்தில் நேற்று முன் தினம் மாலை இன்ஸ்பெக்டர் சர்மா வழக்கமான பணியை மேற்கொண்டிருந்தார். அப்போது, போலீஸ் நிலையத்திற்கு மதுபோதையில் வந்த சப்-இன்ஸ்பெக்டர் பி.ஆர்.சிங் தனது துப்பாக்கியால் இன்ஸ்பெக்டர் ஹிடேந்திர நாத் சர்மா மீது சரமாரியாக சுட்டார். இதில், இன்ஸ்பெக்டர் சர்மாவின் வயிற்றில் குண்டு பாய்ந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த சக போலீசார் இன்ஸ்பெக்டரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், துப்பாக்கிச்சூடு நடத்திய சப்-இன்ஸ்பெக்டரை ஒரு அறையில் வைத்து பூட்டினர். பின்னர், கூடுதல் போலீசார் விரைந்து வந்து துப்பாக்கிச்சூடு நடத்திய சப்-இன்ஸ்பெக்டர் சிங்கை கைது செய்தனர்.
இன்ஸ்பெக்டர் ஹடேந்திர நாத் சர்மா தனது சொந்த வேலைக்காக சப்-இன்ஸ்பெக்டர் சிங்கை பயன்படுத்தியதாகவும் இதனால் ஆத்திரமடைந்த சிங் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.