பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும் - பிரதமர் மோடி

பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேலும் அதிகரிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.;

Update:2022-06-23 22:37 IST

புதுடெல்லி,

இந்தியா, பிரேசில், ரஷ்யா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளை உள்ளடக்கிய 'பிரிக்ஸ்'(BRICS) கூட்டமைப்பின் 14-வது ஆண்டு கூட்டம் சீனாவின் தலைமையில் காணொளி காட்சி வாயிலாக நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடின், பிரேசில் மற்றும் தென் ஆப்பிரிக்க நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பிரிக்ஸ் அமைப்பில் கடந்த சில ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் காரணமாக, அமைப்பின் செல்வாக்கு சர்வதேச அளவில் உயர்ந்துள்ளதாகத் தெரிவித்தார். பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையே பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்பட்ட ஒத்துழைப்பு காரணமாக, நமது நாடுகளின் மக்கள் பலனடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

பிரிக்ஸ் இளைஞர் மாநாடு, பிரிக்ஸ் விளையாட்டு, பல்வேறு அமைப்புகளுக்கு இடையே நடைபெற்ற சந்திப்புகள் ஆகியவற்றின் மூலம் நமது மக்களுக்கு இடையேயான தொடர்பை பலப்படுத்தியுள்ளோம் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

உலக பொருளாதாரத்தை நிர்வகிப்பதிலும் பிரிக்ஸ் நாடுகள் இதே அணுகுமுறையைக் கொண்டிருப்பதாகத் தெரிவித்த பிரதமர் மோடி, பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை மேலும் அதிகரிப்பதன் மூலம், கொரோனா தொற்றுக்குப் பிறகான உலகப் பொருளாதாரத்திற்கு பயனுள்ள பங்களிப்பை அளிக்க முடியும் என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்