பெண் டாக்டர் பலாத்கார வழக்கில் சர்ச்சையான தீர்மானம்; கபில் சிபலுக்கு எதிராக வலுக்கும் கண்டனங்கள்

2024-ம் ஆண்டு ஆகஸ்டு 21-ந்தேதி என குறிப்பிடப்பட்டு, கபில் சிபல் கையெழுத்திட்ட இந்த தீர்மானத்திற்கு எஸ்.சி.பி.ஏ. செயற்குழு ஒப்புதல் அளிக்கவில்லை.;

Update: 2024-08-25 10:02 GMT

புதுடெல்லி,

மேற்கு வங்காளத்தில் கொல்கத்தா நகரின் வடபகுதியில் ஆர்.ஜி. கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பயிற்சி பெண் டாக்டர் ஒருவர், கடந்த 9-ந்தேதி அதிகாலையில் பலாத்காரம் செய்யப்பட்டு, பின்னர் கொடூர கொலை செய்யப்பட்டது நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது.

இதுதொடர்பாக சஞ்சய் ராய் என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை போலீசாரிடம் இருந்து சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. சஞ்சய் ராயிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தவும் முடிவானது.

இந்த விவகாரத்தில், டாக்டர்களுக்கு பாதுகாப்பு கோரி, சம்பவ நாளில் இருந்து கொல்கத்தா நகரில் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். டாக்டர்கள் உள்ளிட்ட மருத்துவ தொழிலாளர்களின் நலன்களுக்காக 10 உறுப்பினர்கள் கொண்ட தேசிய பணி குழு ஒன்றை சுப்ரீம் கோர்ட்டு அமைத்துள்ளது.

இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டின் வழக்கறிஞர் கூட்டமைப்பின் (எஸ்.சி.பி.ஏ.) தலைவராக உள்ள கபில் சிபல், இந்த சம்பவம் பற்றி சமீபத்தில் தீர்மானம் ஒன்றிற்கு கையெழுத்திட்டு அதனை நிறைவேற்றினார். இதுபோன்ற சம்பவங்கள் எல்லாம் வழக்கம் போல் நடக்கின்ற ஒன்று என சர்ச்சைக்குரிய வகையில் தீர்மானம் இடம் பெற்றிருந்தது.

இதற்கு எஸ்.சி.பி.ஏ. செயற்குழுவில் உள்ள உறுப்பினர்கள் பலர் வருத்தம் தெரிவித்து உள்ளனர். 2024-ம் ஆண்டு ஆகஸ்டு 21-ந்தேதி என குறிப்பிடப்பட்டு, கபில் சிபல் கையெழுத்திட்ட இந்த தீர்மானத்திற்கு செயற்குழு ஒப்புதல் அளிக்கவில்லை.

இந்த சூழலில், எஸ்.சி.பி.ஏ. அமைப்பின் கடந்த கால தலைவரான ஆதிஷ் சி. அகர்வாலா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். சர்ச்சைக்குரிய இந்த தீர்மானம் கபில் சிபலால் வாபஸ் பெறப்பட வேண்டும். அல்லது உறுப்பினர் ஒவ்வொருவரிடமும் 72 மணிநேரத்திற்குள் அவர் பொது மன்னிப்பு கோர வேண்டும். அப்படி செய்ய தவறினால், அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர அது வழிவகுக்கும் என கூறியுள்ளார்.

சுப்ரீம் கோர்ட்டு மற்றும் சி.பி.ஐ. அமைப்பின் தீவிர கண்காணிப்பின் கீழ் உள்ள இந்த வழக்கின் தீவிர தன்மையை குழிதோண்டி புதைக்கும் வகையில் சிபல் செயல்பட்டு உள்ளார் என அதுபற்றி கபில் சிபலுக்கு, ஆதிஷ் வெளியிட்ட கடிதம் தெரிவிக்கின்றது.

Tags:    

மேலும் செய்திகள்