கருணை கொலைக்கு அனுமதி கோரி ஜனாதிபதி, பிரதமருக்கு ஒப்பந்ததாரர் கடிதம்
கருணை கொலைக்கு அனுமதி கோரி ஜனாதிபதி, பிரதமருக்கு ஒப்பந்ததாரர் கடிதம் அனுப்பியுள்ளார்.
பெங்களூரு; கர்நாடகத்தில் அரசு ஒப்பந்த பணிகளுக்கு மந்திரிகள் 40 சதவீத கமிஷன் கேட்பதாக கூறி கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரசு ஒப்பந்ததாரர்கள் சங்க தலைவர் கெம்பண்ணா பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருந்தார். 40 சதவீத கமிஷன் விவகாரத்தை கையில் எடுத்து காங்கிரஸ் மற்றும் ஜனதாதளம் (எஸ்) கட்சிகள், பசவராஜ் பொம்மையை பதவி விலக கோரி வலியுறுத்தி வருகிறது.
இந்த நிலையில் அரசு ஒப்பந்ததாரர் தனக்கு 2 ஆண்டுகளாக ஒப்பந்த பணிகளை செய்ததற்கான அரசு பணம் விடுக்கவில்லை, அதனால் கருணை கொலைக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கோரி ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி வைத்துள்ளார். தார்வார் மாவட்டம் உப்பள்ளி சாந்திநகரை சேர்ந்த பசவராஜ் அமரகோல் என்பவர் தான் கருணை கொலைக்கு அனுமதி கேட்டு ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு கடிதம் எழுதியவர் ஆவார். இவர், அரசு ஒப்பந்த பணிகளுக்காக 40 சதவீதம் கமிஷன் கேட்கப்படுகிறது, கடந்த 2 ஆண்டுகளாக ஒப்பந்த பணத்தை விடுக்காத காரணத்தால் குடும்பம் நடத்த தன்னால் முடியவில்லை. ரூ.1 கோடியை 2 ஆண்டுகளாக கொடுக்காமல் கிடப்பில் போட்டுள்ளனர். எனவே கருணை கொலைக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.