உயர்அழுத்த மின்கம்பி செல்லும் பாதையில் கட்டிடம் கட்டினால் கிரிமினல் வழக்கு
உயர்அழுத்த மின்கம்பி செல்லும் பாதையில் கட்டிடம் கட்டினால் கிரிமினல் வழக்கு பாயும் என்று துஷார் கிரிநாத் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:-
துஷார் கிரிநாத் தகவல்
பெங்களூரு எலெக்ட்ரானிக் சிட்டி அருகே சிங்கசந்திரா பகுதியில் மசூதி ஒன்று புதிதாக கட்டப்பட்டு வருகிறது. அந்த கட்டிடம் கட்டும் பகுதியில் உயர்அழுத்த மின்கம்பி செல்கிறது. இதனால் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த நிலையில் உயர்அழுத்த மின்கம்பிகள் செல்லும் பகுதியில் கட்டப்படும் மசூதியை அகற்றவும், இதற்கு தடை விதிக்க கோரியும் இந்து அமைப்பினர், மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர். அப்போது அவர்கள் கூறுகையில், 'பெங்களூருவில் உயர்அழுத்த மின்கம்பிகள் செல்லும் பகுதியில் இருந்த இந்து கோவிலை அகற்றி, அங்கிருந்தவர்களை இடமாற்றம் செய்தனர்.
ஆனால் தற்போது பிற மதத்தினருடைய கட்டிடத்திற்கு தடை விதிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர்' என்று கூறினர். இதையடுத்து இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் துஷார் கிரிநாத் பேசுகையில், 'பெங்களூருவில் உயர்அழுத்த மின்கம்பிகள் செல்லும் பகுதியில் கட்டிடம் கட்டப்படுவது உறுதியானால், அவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்படும். முன்னதாக அவர்களிடம் வேறு இடத்திற்கு கட்டிடத்தை மாற்று மாறு அறிவுறுத்தப்படும். இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு நடத்த உள்ளனர்' என்று கூறினார்.