காங்கிரசுக்கு ஊழல், வாரிசு அரசியல் மட்டுமே முக்கியம் - பிரதமர் மோடி குற்றச்சாட்டு

காங்கிரசும், அதன் கூட்டணி கட்சிகளும் சனாதன தர்மத்தை அழிக்க விரும்புகின்றன என்று பிரதமர் மோடி கூறினார்.;

Update: 2023-11-20 18:25 GMT

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தல், வருகிற 25-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி, அங்குள்ள பாலியில் நடந்த பா.ஜனதா தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.

அதில் அவர் பேசியதாவது:-

வளர்ச்சிக்கு உயர் முன்னுரிமை அளிக்கும் அரசு, ராஜஸ்தானுக்கு தேவைப்படுகிறது. ஒட்டுமொத்த நாடும் வளர்ச்சி இலக்கை எட்ட இரவு, பகலாக பாடுபட்டு கொண்டிருக்கிறது. 21-ம் நூற்றாண்டில் இந்தியா அடையும் உயரத்தில், ராஜஸ்தான் முக்கிய பங்கு வகிக்கும். ஆனால், ராஜஸ்தானை ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு வாரிசு அரசியல், ஊழல் ஆகியவற்றை விட வேறு எதுவும் முக்கியம் இல்லை. சமரச அரசியலை தவிர வேறு எதைப்பற்றியும் காங்கிரஸ் சிந்திக்காது. அதனால், பயங்கரவாதம் மற்றும் கலவர சிந்தனை கொண்டவர்கள் செழித்து வளர்ந்துள்ளனர்.

காங்கிரசும், அதன் கூட்டணி கட்சிகளும் சனாதன தர்மத்தை அழிக்க விரும்புகின்றன. சனாதனத்தை அழிப்பது என்பதற்கு ராஜஸ்தான் கலாசாரத்தை அழிப்பது என்று அர்த்தம். காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், பெண்களுக்கு எதிரான மனநிலை கொண்டவை. பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை நிறைவேற்றியதில் இருந்து பெண்களுக்கு எதிரான பிரசாரத்தை தொடங்கி விட்டனர்.

நமது தாய்மார்களுக்கும், சகோதரிகளுக்கும் எதிராக ஆட்சேபகரமான கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள். பீகார் மாநில முதல்-மந்திரி, சட்டசபையில் பெண்களை பற்றி தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்துகிறார். ஆனால், அதைப்பற்றி எந்த காங்கிரஸ் தலைவரும் எதுவும் சொல்லவில்லை. இதுதான் காங்கிரசின் உண்மை முகம். இதை ராஜஸ்தான் மக்கள் உணர்ந்து கொண்டுள்ளனர்.

அதுபோல், ராஜஸ்தானில் தலித்துகளுக்கு எதிரான அராஜகத்தை காங்கிரஸ் கட்சி கண்டும், காணாமல் இருக்கிறது. பீகார் மாநில முதல்-மந்திரி, மிகவும் பின்தங்கிய குடும்பத்தை சேர்ந்த முன்னாள் முதல்-மந்திரிக்கு எதிராகவும் தரக்குறைவாக பேசினார். அதில் அவருக்கு ஒரு மகிழ்ச்சி. அது தவறு என்று காங்கிரஸ் சொல்லவில்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்