சாவர்க்கர் குறித்த ராகுல்காந்தி பேச்சு, மகா விகாஸ் அகாடி கூட்டணியில் பாதிப்பை ஏற்படுத்துமா? நானா படோலே பதில்

சாவர்க்கர் பற்றிய ராகுல்காந்தியின் பேச்சுக்கு உத்தவ் தாக்கரே கட்சி மீண்டும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், மகா விகாஸ் அகாடி கூட்டணியில் பாதிப்பை ஏற்படுத்துமா? என்பதற்கு காங்கிரஸ் பதிலளித்துள்ளது.

Update: 2023-03-27 23:30 GMT

எம்.பி. பதவி பறிப்பை தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சமீபத்தில் நிருபர்கள் சந்திப்பில் மராட்டியத்தை சேர்ந்த இந்துத்வா கொள்கையாளர் சாவர்க்கரை கடுமையாக தாக்கி பேசினார்.

நான் சார்க்கர் அல்ல

"மன்னிப்பு கேட்க நான் சாவர்க்கர் அல்ல. ராகுல் காந்தி" என்று அவர் கூறியது மராட்டிய அரசியலில் பூகம்பமாக வெடித்துள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறிய கருத்துகள் சாவர்க்கரை அவமதிப்பதாக இந்துத்வா கொள்கையை பின்பற்றி வரும் பா.ஜனதா, சிவசேனா கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. மேலும் அவருக்கு எதிராக போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளன.

இந்தநிலையில் மகாவிகாஸ் அகாடி கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்துத்வா கொள்கையை பின்பற்றும் உத்தவ் தாக்கரே, ராகுல் காந்திக்கு எதிராக எதுவும் பேசவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

உத்தவ் தாக்கரே எதிர்ப்பு

இதற்கு பதில் அளிக்கும் விதமாக கடந்த 2 நாட்களாக உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்துள்ளது. "சாவர்க்கர் எனது அடையாளம். அவரை அவமதிப்பதை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது" என்று உத்தவ் தாக்கரே கூறினார்.

அதுமட்டும் இன்றி ஜனநாயகத்தை காப்பாற்ற ஒன்றுபட்டு போராட வேண்டிய நேரத்தில் ராகுல் காந்தியின் இதுபோன்ற பேச்சு கூட்டணியில் பிளவை ஏற்படுத்தும் என்று வெளிப்படையாக தெரிவித்தார். அதேபோல நேற்று அக்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழான சாம்னாவிலும் காங்கிரசை பற்றி விமர்சிக்கப்பட்டுள்ளது. சாவர்க்கர் குறித்த ராகுல் காந்தியின் அவதூறுகள் அவருக்கு மக்களிடம் உள்ள அனுதாபத்தை குறைத்துவிடும் என்று அதில் கூறப்பட்டு இருந்தது.

கூட்டணியில் குழப்பம்

இதனால் மராட்டிய அரசியலில் பிரதான எதிர்க்கட்சிகள் அமைத்திருக்கும் மகா விகாஸ் அகாடி கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்தநிலையில் மாநில காங்கிரஸ் தலைவர் நானா பாடோலேவிடம் நேற்று நிருபர்கள் உத்தவ் தாக்கரே எதிர்ப்பு குறித்து கேள்வி எழுப்பினர். அப்போது கேள்விகளுக்கு படோலே நேரடியாக பதிலளிப்பதை தவிர்த்தார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

கொள்கை முக்கியம்...

அனைவரையும் ஒன்றாக அழைத்து செல்வதே காங்கிரஸ் கட்சியின் சித்தாந்தம். நாட்டிற்கு சுதந்திரம் பெற்று தந்ததும், அரசியலைப்பு சட்டத்தின் அடிப்படையில் இதற்காக உழைத்ததும் காங்கிரஸ் கட்சி தான். எனவே ஆட்சிக்கு வருவதும், ஆட்சி அதிகாரத்தில் இல்லாமல் இருப்பதும் எங்களுக்கு இரண்டாம் பட்சம் தான். காங்கிரஸ் கட்சிக்கு கொள்கை மட்டுமே முக்கியம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் சாவர்க்கர் பிரச்சினையால் எதிர்க்கட்சி கூட்டணி ஒற்றுமையில் பாதிப்பு ஏற்படுமா என்று கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், "காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தியுடன் கலந்துரையாடியதை தொடர்ந்து கூட்டணி அமைக்கப்பட்டது. மகா விகாஸ் அகாடி கூட்டணி குறித்த அனைத்து முடிவுகளும் கட்சியின் உயர் மட்டத்தில் இருந்து தான் எடுக்கப்பட்டது.

காங்கிரசும், உத்தவ் தாக்கரே கட்சியும் வெவ்வேறு சித்தாந்தங்களை பின்பற்றுகின்றன. காங்கிரஸ் நாட்டின் மிக பழமையான கட்சியாகும், அதன் சித்தாந்தம் என்ன என்பது அனைவருக்கும் தெரியும். உத்தவ் சிவசேனா என்ன கூறுகிறதோ அது அவர்களின் கொள்கையாகும். மகா விகாஸ் அகாடி கூட்டணியின் குறைந்தபட்ச செயல்திட்டத்தில் சாவர்க்கர் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்