காங்கிரசார் சத்திய அரிச்சந்திரர்களா?; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கேள்வி

காங்கிரசார் சத்திய அரிச்சந்திரர்களா? என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கேள்வி எழுப்பியுள்ளார்.

Update: 2022-08-25 20:25 GMT

பெங்களூரு:

முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

மக்களுக்கு புரிகிறது

40 சதவீத கமிஷன் புகார் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிடுமாறு எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கூறியுள்ளார். ஆனால் புகாருக்கான ஆதாரங்கள் இருக்க வேண்டும். ஆதாரங்கள் இன்றி வெறும் புகார்களை மட்டும் கூறினால் விசாரணை நடத்த முடியாது. சித்தராமையா பொறுப்பற்ற முறையில் பேசுகிறார். முறைகேடு விவகாரங்கள் குறித்து விசாரிக்க லோக்அயுக்தா அமைப்பு உள்ளது.

ஐகோர்ட்டு உத்தரவால் ஊழல் தடுப்பு படையின் அதிகாரம் லோக்அயுக்தாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. யார் மீது வேண்டுமானாலும் அங்கு புகார் கூறலாம். ஆனால் ஒப்பந்ததாரர்கள் அரசியல் நோக்கத்துடன் பேசுகிறார்கள். ஒப்பந்ததாரர்கள் சங்க தலைவர் கெம்பண்ணா சித்தராமையாவை சந்தித்துவிட்டு அரசுக்கு எதிராக புகார் கூறுகிறார். இதன் அர்த்தம் என்ன என்பது மக்களுக்கு புரிகிறது.

பணம் பட்டுவாடா

அனைத்து கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களும் கமிஷன் விவகாரத்தில் ஈடுபட்டு இருப்பதாக அவர் கூறியுள்ளார். முந்தைய ஆட்சியில் இத்தகைய விவகாரம் இருந்திருந்தால் அது ஏன் வெளியே வரவில்லை. சிறிய ஒப்பந்ததாரர்களுக்கு திட்ட பணிகளுக்கான பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது. இதில் வெளிப்படைத்தன்மை மற்றும் பணி மூப்பு முறை கொண்டு வரப்பட்டுள்ளது.

ஆனாலும் அரசு மீது ஒப்பந்ததாரர்கள் குறை கூறுகிறார்கள். அதிகாரிகள் யாராவது விதிமுறைகளை மீறி இருந்தால் அந்த அதிகாரி என்று அவர்கள் கூற வேண்டும். மந்திரி முனிரத்னா மீது புகார் கூறியுள்ளனர். அவர் மானநஷ்ட வழக்கு தொடுப்பதாக கூறியுள்ளார். காங்கிரசார் சத்திய அரிச்சந்திரர்களா?. அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் குற்றம்சாட்டுகிறார்கள்.

நடவடிக்கை எடுக்கிறேன்

கெம்பண்ணா முன்வைத்து கோரிக்கைகளை நிறைவேற்றியுள்ளேன். தவறு செய்தவர்கள் குறித்த ஆதாரங்கள் இருந்தால் தாருங்கள் நடவடிக்கை எடுக்கிறேன் என்று அவரிடம் கூறினேன். டெண்டர் பணிகளில் தவறுகள் நடைபெறுவதை தடுக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒரு குழு அமைத்துள்ளேன். இதன் பயனை ஒப்பந்ததாரர்கள் பெற வேண்டும்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்