நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு: காங்கிரஸ் ஆதரவு
நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த காங்கிரஸ் செயற்குழு ஒப்புதல் அளித்துள்ளதாக அக்கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.;
புதுடெல்லி,
காங்கிரஸ் கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டம், கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் டெல்லியில் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா, ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதல்-மந்திரி பூபேஷ் பெகல், இமாச்சல பிரதேச முதல்-மந்திரி சுக்விந்தர் சிங் சாகு, பஞ்சாப் முன்னாள் முதல்-மந்திரி சரண்ஜித் சிங் சன்னி, காங்கிரஸ் அமைப்பு பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், செய்தித் தொடர்பு அமைப்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக விரிவாக விவாதிக்கப்பட்டதாக ராகுல் காந்தி தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், சாதிவாரி கணக்கெடுப்பு நாடு முழுவதும் நடத்தப்பட வேண்டும் என்ற யோசனைக்கு காங்கிரஸ் செயற்குழு ஒருமனதாக ஆதரவு தெரிவித்துள்ளது. இது ஒரு முற்போக்கான நடவடிக்கை. காங்கிரஸ் ஆளும் அனைத்து மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அனைவரும் ஆதரவு தெரிவித்தனர் என்று குறிப்பிட்டார்.
சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த ராகுல்காந்தி,
இந்தியா கூட்டணியில் உள்ள பெரும்பாலான கட்சிகள் சாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்துகின்றன. காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். பாஜக அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவில்லை என்றால், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் நடத்தும்.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கான ஆற்றல் பிரதமர் நரேந்திர மோடிக்கு இல்லை. நாட்டில் யார் எத்தனை சதவீதம் பேர் உள்ளனர் என்பதை சாதிவாரி கணக்கெடுப்பு தெளிவாக்கும். சாதிவாரி கணக்கெடுப்புக்கு பிறகே மக்களின் பொருளாதார நிலை குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
காங்கிரசில் 4 முதல்-மந்திரிகளில் 3 பேர் ஓபிசியை சேர்ந்தவர்கள். 10 பாஜக முதல்-மந்திரிகளில் ஒரே ஒரு முதல்-மந்திரிதான் ஓபிசி பிரிவை சேர்ந்தவர். மேலும் சாதிவாரி கணக்கெடுப்பை காங்கிரஸ் கமிட்டி ஒருமனதாக ஆதரிக்கிறது என்றார்.