தொங்கு சட்டசபை இல்லாமல் முழு பலத்துடன் ஆட்சி அமைக்கும் காங்கிரஸ்

கர்நாடகத்தில் கடந்த 2004-ம் ஆண்டுக்கு பிறகு தொங்கு சட்டசபை இல்லாமல் காங்கிரஸ் முழு பலத்துடன் ஆட்சி அமைக்க உள்ளது.;

Update: 2023-05-13 23:15 GMT

பெங்களூரு:-

ஆட்சி கலைப்பு

கர்நாடகத்தில் 1952-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரை நடந்த தேர்தலில் முதன் முதலில் 1983-ம் ஆண்டு தொங்கு சட்டசபை அமைந்தது. அந்த ஆண்டு நடந்த தேர்தலில் ஜனதா கட்சி 93 தொகுதிகளிலும், காங்கிரஸ் 82 தொகுதிகளையும் கைப்பற்றியது. அந்த தேர்தலில் 18 தொகுதிகளை மட்டுமே பா.ஜனதா கைப்பற்றி இருந்தது. இந்த சந்தர்ப்பத்தில் தேவேகவுடாவுக்கும், எஸ்.பங்காரப்பாவுக்கும் முதல்-மந்திரி பதவியில் போட்டி ஏற்பட்டது.

இதனால் தேசிய அரசியலில் இருந்து ராமகிருஷ்ணா ஹெக்டே மாநில அரசியலுக்கு திரும்பி சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தார். ஆனால் இந்த கூட்டணி ஆட்சி 1985-ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. ராமகிருஷ்ணா ஹெக்டே ஆட்சியை கலைத்துவிட்டு தேர்தலை சந்தித்தார்.

சித்தராமையா காங்கிரசில் சேர்ந்தார்

அதன்பிறகு 2004-ம் ஆண்டு நடந்த கர்நாடக சட்டசபை பொதுத்தேர்தலில் பா.ஜனதா 79 இடங்களை கைப்பற்றியது. ஜனதா தளம் 58 இடங்களையும், காங்கிரஸ் 65 இடங்களையும் கைப்பற்றியது. இதையடுத்து காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தன. தரம்சிங் முதல்-மந்திரி ஆனார். இந்த சூழ்நிலையில் தேவேகவுடாவுக்கும், சித்தராமையாவுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. அதனால் ஜனதா தளம்(எஸ்) கட்சியில் இருந்து பிரிந்த சித்தராமையா காங்கிரசில் சேர்ந்தார்.

அதையடுத்து குமாரசாமி 42 எம்.எல்.ஏ.க்களுடன் பா.ஜனதாவுடன் கூட்டணி ஆட்சி அமைத்தார். ஆனால் 20 மாதங்களுக்கு பிறகு குமாரசாமி முதல்-மந்திரி பதவியை விட்டு கொடுக்காததால் எடியூரப்பாவுக்கும், குமாரசாமிக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. பின்னர் ஒரு வழியாக குமாரசாமி முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். எடியூரப்பா முதல்-மந்திரி ஆனார்.

5 ஆண்டுகாலம் ஆட்சி

இருப்பினும் பல நெருக்கடிகளை கொடுத்து கூட்டணிக்கு அளித்து வந்த ஆதரவையும் குமாரசாமி வாபஸ் வாங்கினார். இதனால் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. அதையடுத்து குடியரசு தலைவர் ஆட்சி அமலுக்கு வந்தது. 2008-ம் ஆண்டு நடந்த சட்டசபை பொதுத்தேர்தலில் பா.ஜனதா 110 தொகுதிகளை கைப்பற்றியது. தனிப்பெரும்பான்மைக்கு 113 எம்.எல்.ஏ.க்கள் தேவை என்ற எடியூரப்பா 6 சுயேச்சைகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தார்.

இந்த கூட்டணி அரசு 5 ஆண்டுகள் ஆட்சி நடத்தியது. ஊழல் வழக்கில் எடியூரப்பா சிறைக்கு சென்ற நிலையில், சதானந்தகவுடா மற்றும் ஜெகதீஷ் ஷெட்டர் ஆகியோர் முதல்-மந்திரிகளாக செயல்பட்டனர். 2013-ம் ஆண்டு நடந்த சட்டசபை பொதுத்தேர்தலில் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. முதல்-மந்திரியாக சித்தராமையா 5 ஆண்டுகாலம் ஆட்சி நடத்தினார்.

தொங்கு சட்டசபை

பின்னர் 2018-ம் ஆண்டு நடந்த தேர்தலில் பா.ஜனதா 104 தொகுதிகளை கைப்பற்றியது. இருப்பினும் காங்கிரசும், ஜனதா தளம்(எஸ்) கட்சியும் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தன. குமாரசாமி முதல்-மந்திரி ஆனார். இந்த கூட்டணி ஆட்சி ஒரே வருடத்தில் கவிழ்ந்தது. ஆபரேஷன் தாமரை மூலம் மீண்டும் பா.ஜனதா ஆட்சி அமைத்தது.

இப்படி 1983, 2004, 2006, 2008 மற்றும் 2018-ம் ஆண்டுகளில் தொங்கு சட்டசபை அமைந்த நிலையில் இந்த முறை மீண்டும் காங்கிரஸ் 130 தொகுதிகளுக்கும் மேல் கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்