நாட்டில் ஆங்கிலேயர்களை விட காங்கிரஸ் 2 மடங்கு அட்டூழியம் செய்தது; பா.ஜனதா தலைவர் நளின்குமார் கட்டீல் தாக்கு

நாட்டில் ஆங்கிலேயர்களைவிட காங்கிரஸ் 2 மடங்கு அட்டூழியம் செய்தது என்று கர்நாடக பா.ஜனதா தலைவர் நளின்குமார் கட்டீல் தெரிவித்துள்ளார்.

Update: 2022-06-27 15:21 GMT

மங்களூரு;

நளின்குமார் கட்டீல் பேச்சு

நாட்டில் காங்கிரஸ் ஆட்சியின் போது கடந்த 1975-ம் ஆண்டு ஜூன் 25-ந்தேதி நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில் 47 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி அதனை தட்சிண கன்னடா மாவட்ட பா.ஜனதா சார்பில் கருப்பு தினமாக அனுசரிக்கப்பட்டது. இதில் கர்நாடக மாநில பா.ஜனதா தலைவரும், எம்.பி. யுமான நளின்குமார் கட்டீல் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

நாட்டில் 2-வது பெரிய போராட்டம் நடந்துள்ளது என்றால், அது நெருக்கடி நிலைக்கு எதிரான போராட்டம் தான். இதனை எதிர்த்து போராடியவர்களை மறக்க முடியாது. இந்த போராட்டத்தில் சிலர் உயிரிழந்தனர். தட்சிண கன்னடா மாவட்டத்தில் இருந்தும் கூட போராட்டத்தில் பலர் கலந்து கொண்டனர்.

அப்போதைய இந்திரா காந்தி தலைமையிலான அரசு 21 மாதங்கள் நெருக்கடி நிலையை விதித்து ஜனநாயகத்தை படுகொலை செய்தது. நெருக்கடி நிலை, இந்திய அரசியலில் ஒரு மைல்கல். நாட்டில், ஆங்கிலேயர்களை விட காங்கிரஸ் 2 மடங்கு அட்டூழியங்கள் செய்துள்ளது.

சட்டத்தை மதிக்கவில்லை

சுதந்திர போராட்ட வீரர்கள், தியாகிகளின் தியாகத்தை மறந்தால், தற்போதைய காங்கிரசின் நிலைதான் நம் நிலையும் என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும். நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல், சோனியா காந்தியின் நிலை பரிதாபமாக உள்ளது. விசாரணையை எதிர்கொள்ள ஏன் பயப்படுகிறார்கள்?.

முன்னதாக நரேந்திர மோடி குஜராத் முதல்-மந்திரியாக இருந்தபோதும், பா.ஜனதா தேசிய தலைவராக இருந்த அமித்ஷாவும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்கள் அதனை தைரியமாக எதிர்கொண்டனர். ஆனால் காங்கிரஸ் போராட்டம் நடத்தி வருகிறது. இதன்மூலம் காங்கிரஸ் சட்டத்தை மதிக்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்