இந்தியாவின் வளர்ச்சி பணிகளை காங்கிரசால் ஜீரணிக்க முடியவில்லை: பிரதமர் மோடி

இந்தியாவின் வளர்ச்சி பணிகளை காங்கிரஸ் கட்சியால் ஜீரணிக்க முடியவில்லை என பிரதமர் மோடி போபாலில் நடந்த பொது கூட்டமொன்றில் பேசியுள்ளார்.

Update: 2023-09-25 07:45 GMT

போபால்,

மத்திய பிரதேசத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனை சந்திக்க பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தீவிர அரசியல் பணியாற்றி வருகின்றன. தேர்தலில் 150-க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றும் முனைப்புடன் பா.ஜ.க. பணியாற்றி வருகிறது.

இந்நிலையில், பா.ஜ.க. சார்பில் நடைபெறும் பொது பேரணி ஒன்றில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று போபால் நகருக்கு சென்றார். இந்த பேரணியில் 10 லட்சம் தொண்டர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை முன்னிட்டு பள்ளிகள் பல மூடப்பட்டன. வாகன போக்குவரத்து திருப்பி விடப்பட்டது. இந்த நிலையில், போபால் நகரில் நடந்த கூட்டமொன்றில் கலந்து கொண்டு பிரதமர் மோடி பேசினார்.

அவர் பேசும்போது, இந்தியாவின் வளர்ச்சி பணிகளை காங்கிரசால் ஜீரணிக்க முடியவில்லை. நாடு வளர்ச்சி பெற வேண்டும் என்று அவர்கள் விரும்பவில்லை.

அவர்கள் நாட்டின் சாதனைகளை பற்றி ஒருபோதும் பெருமை கொள்ளவில்லை. ஏனெனில், அவர்கள் மாற வேண்டும் என்றோ அல்லது நாடு மாறவோ அல்லது வளர்ச்சி பெறவோ விரும்பவில்லை.

காங்கிரஸ் கட்சி ஒரு சந்தர்ப்பம் பெற்றால், (மத்திய பிரதேசத்தில் ஆட்சி அதிகாரத்திற்கு வருவது) அவர்கள் பீமாரு ராஜ்யம் (ஏழை மாநிலம்) ஆக்கி விடுவார்கள் என்று குற்றச்சாட்டாக கூறினார்.

காங்கிரசார் டிஜிட்டல் வழியேயான பரிமாற்றங்களை எதிர்த்தனர். ஆனால், யு.பி.ஐ. நடைமுறையால் உலகம் ஈர்க்கப்பட்டு உள்ளது என பிரதமர் மோடி பெருமையாக கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்