ராஜஸ்தானில் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் - முதல்-மந்திரி அசோக் கெலாட்
அரசின் திட்டங்கள் மற்றும் வாக்குறுதிகள் மீது மக்களுக்கு அதிக நம்பிக்கை உள்ளது என்று முதல்-மந்திரி அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.;
ஜெய்ப்பூர்,
ராஜஸ்தான் மாநிலத்தில், சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் மூடி 'சீல்' வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு பலத்த பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன. அங்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு படையினரின் கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளன.
தெலுங்கானாவில் வருகிற 30-ந்தேதி தேர்தல் நடைபெற இருப்பதால், ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநிலங்களில் பதிவான வாக்குகள் டிசம்பர் 3-ந்தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படுகின்றன. அடுத்த ஆண்டு (2024) நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக பார்க்கப்படும் இந்த 5 மாநில தேர்தல்களின் முடிவுகளுக்காக நாடே ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளது.
இந்த நிலையில், ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
"பாஜக தலைவர்கள் தங்கள் தேர்தல் பிரசாரத்தில் ஆத்திரமூட்டும் வார்த்தைகளைப் பயன்படுத்தினர். அதைப் பற்றி ராஜஸ்தான் மக்கள் கவலைப்படவில்லை, அதற்கு தக்க பதிலடி கொடுப்பார்கள். எங்கள் திட்டங்கள் மற்றும் வாக்குறுதிகள் மீது மக்களுக்கு அதிக நம்பிக்கை உள்ளது. ராஜஸ்தானில் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். ராஜஸ்தானில் ஆட்சிக்கு எதிரான மனநிலை இல்லை என்று பல்வேறு நிபுணர்கள் கூறி இருக்கிறார்கள். எனவே, காங்கிரஸ் ஆட்சியை தக்க வைக்காது என கூறுவதற்கு வாய்ப்பே இல்லை."
இவ்வாறு அவர் கூறினார்.