சீன ஆக்கிரமிப்பு விவகாரம்: மத்திய அரசு மீது காங்கிரஸ் விமர்சனம்
இந்தியாவின் அருணாசலப் பிரதேச மாநிலத்தை சொந்தம் கொண்டாடி வரும் சீனா, லடாக் பகுதியில் அத்துமீறும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.
புதுடெல்லி,
எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டுக்கு 20 கிலோ மீட்டர் தொலைவில் கிழக்கு லடாக்கில் உள்ள பாங்காங் த்சோ ஏரியின் மீது சீனா இரண்டாவது பாலத்தை கட்டி வருவதாக தகவல்கள் வெளியாகின. இது குறித்து மத்திய அரசு பதில் அளிக்குமாறு காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது. இந்திய பகுதியை சீனா ஆக்ரமித்துள்ளதா என்பது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம் அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கேரா தெரிவித்துள்ளார்.
இது மிகவும் முக்கிய பிரச்சினை என்றும், பிரதமர் தமது சொந்த புகழை பெரிதுபடுத்துவதை கைவிட்டு நாட்டை பற்றி சிந்திக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். சீனா ராணுவத்தின் உதவியுடன் பாங்காங் த்சோ ஏரி மீது முதல் பாலம் கட்டப்பட்டுள்ள நிலையில், தற்போது 2வது பாலம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். போர் நிறுத்த ஒப்பந்தத்தை சீனா மீறுவதாகவும், இதற்கு இந்தியா உறுதியான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இது தொடர்பாக இன்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் வயநாடு தொகுதி எம்.பியுமான ராகுல் காந்தி வெளியிட்ட டுவிட் பதிவில், ' பாங்காங் சோ ஏரியில் சீனா முதல் பாலம் கட்டும் போதும், இரண்டாவது பாலம் கட்ட்டும் போதும், நிலையை கண்காணித்து வருவதாக இந்திய அரசு கூறி வருகிறது. இந்தியாவின் பாதுகாப்பும் ஒருமைப்பாடும் விவாதத்திற்கு அப்பாற்பட்டது. துணிச்சலற்ற பணிவான நடவடிக்கை பலனளிக்காது. தேசத்தை பிரதமர் கண்டிப்பாக பாதுகாக்க வேண்டும்" எனப்பதிவிட்டுள்ளார்.