சுதந்திரப் போராட்ட வீரர்கள் விளம்பரத்தில் முன்னாள் பிரதமர் நேருவை புறக்கணித்த கர்நாடக அரசுக்கு காங்கிரஸ் பதிலடி!

பண்டிட் நேருவின் புகைப்படத்தை சுதந்திரப் போராட்ட வீரர்கள் பட்டியலில் சேர்க்காதது அற்பமான செயல் என பாஜகவை காங்கிரஸ் விமர்சித்துள்ளது.;

Update: 2022-08-14 14:00 GMT

பெங்களூரு,

நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவை சுதந்திரப் போராட்ட வீரர்கள் பட்டியலில் சேர்க்காதது தொடர்பாக கர்நாடக பாஜக அரசை,  காங்கிரஸ் கடுமையாக சாடியது.

பத்திரிக்கைகளில் வெளியான மாநில அரசின் விளம்பரத்தில், பண்டிட் நேருவின் புகைப்படத்தை சுதந்திரப் போராட்ட வீரர்கள் பட்டியலில் சேர்க்காமல் இருப்பது மிகவும் அற்பமான செயல் என பாஜகவை காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

இல்லந்தோறும் மூவண்ணக்கொடி என்ற முன்முயற்சியை விளம்படுத்துவதற்காக கர்நாடக அரசின் சார்பில் முழுபக்க அளவிலான செய்தித்தாள் விளம்பரம் இன்று வெளியானது. அதில் ஏராளமான சுதந்திரப் போராட்ட வீரர்கள் படங்கள் இடம்பெற்றிருந்தன.

ஆனால் நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் படம் அதில் இல்லை.இதனையடுத்து இந்த விவகாரம் சர்ச்சையானது.

இது குறித்து கர்நாடக காங்கிரஸ் தலைவர் பிரியங் கார்கே கூறுகையில், "நேருவை தொடர்ந்து தாக்கி பேசுவது பாஜகவுக்கு வாடிக்கையாகிவிட்டது. இந்தியாவில் நடக்கும் எல்லா தவறுகளுக்கும் பா.ஜ.க நேருவை குற்றம் சாட்டுகிறது. ஆனால், பாஜகவில் நேருவுக்கு இணையான தலைவர்கள் இல்லை.

எவ்வளவோ களங்கம் ஏற்படுத்த முயன்றாலும், அவரது பாரம்பரியத்தை பாஜக அகற்ற முடியாது" என்று தெரிவித்தார்.

மேலும், மூத்த காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேசும் கர்நாடக முதல் மந்திரி பசவராஜ் பொம்மையை விமர்சித்துள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது, "கர்நாடக முதல் மந்திரி பசவராஜ் பொம்மையின் தந்தை மற்றும் அவரது அரசியல் குரு எம் என் ராய் ஆகியோர் நேரு மீது பற்று கொண்டவர்கள்.

தனது பதவியை காப்பாற்றிக்கொள்ள பசவராஜ் செய்த இந்த செயல் மூலம் அவர்கள் இருவரையும் அவமதித்துவிட்டார்" என்று கூறினார்.

முன்னதாக நேருவை குற்றம்சுமத்தி பாஜக வீடியோ ஒன்றை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியது.

நாட்டின் 2-வது பிரிவினை பயங்கரங்கள் நினைவுநாள் இன்று கடைப்பிடிக்கப்படும் சூழலில், காங்கிரஸ் கட்சியை இலக்காக கொண்டு 7 நிமிடங்கள் ஓடும் வீடியோ ஒன்றை பா.ஜ.க. இன்று வெளியிட்டு உள்ளது.

அதில், பாகிஸ்தான் உருவாவதற்கான முகமது அலி ஜின்னா தலைமையிலான முஸ்லிம் லீக்கின் கோரிக்கைகளுக்கு முன்னாள் பிரதமர் நேரு தலைவணங்கி விட்டார் என குற்றம்சாட்டும் வகையில், காட்சிகள் இடம் பெற்று உள்ளன.

இதனை காங்கிரசார் கண்டித்த நிலையில், தொடர்ந்து நேரு புறக்கணிக்கப்படுவதை பல்வேறு காங்கிரஸ் தலைவர்களும் கண்டித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்