மந்திரி எஸ்.டி.சோமசேகருக்கு கருப்பு கொடி காட்டி காங்கிரசார் போராட்டம்
டி.நரசிப்புராவுக்கு வந்த மந்திரி எஸ்.டி.சோமசேகருக்கு கருப்பு கொடி காட்டி காங்கிரசார் போராட்டம் நடத்தினர்.
மைசூரு;
முன்னாள் முதல்-மந்திரியும், எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையா கடந்த 18-ந்தேதி குடகிற்கு சென்றபோது, அவரது கார் மீது முட்டை வீசப்பட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் மைசூரு மாவட்ட பொறுப்பு மந்திரி எஸ்.டி.சோமசேகர் நேற்று மைசூரு மாவட்டம் டி.நரசிப்புரா தாலுகா மூகூர் கிராமத்தில் உள்ள திரிபுரா சுந்திரி அம்மன் கோவில் திருவிழாவில் கலந்து கொண்டார்.
அப்போது அவர் டி.நரசிப்புராவுக்கு காரில் வந்தபோது, அவரது காரை மறித்து காங்கிரஸ் கட்சியினர் கருப்பு கொடி காண்பித்து போராட்டம் நடத்தினர். மேலும் மாநில அரசுக்கு எதிராகவும், பா.ஜனதாவுக்கு எதிராகவும் காங்கிரஸ் கட்சியினர் கோஷம் எழுப்பினர்.
இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் காங்கிரசாரை கைது செய்து அங்கிருந்து அழைத்து சென்றனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் அந்தப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.