'போலீசார் மிருகத்தனமாக நடந்து கொண்டனர்' - டெல்லியில் கைதான காங்கிரஸ் எம்.பி.க்கள் வேதனை

போலீசார் மிருகத்தனமாக நடந்து கொண்டதாக டெல்லியில் கைதான காங்கிரஸ் எம்.பி.க்கள் வேதனை தெரிவித்தனர்.

Update: 2022-06-14 21:37 GMT

புதுடெல்லி,

தேசிய ஹெரால்டு வழக்கு தொடர்பாக டெல்லி அமலாக்க அலுவலகத்தில் ராகுல்காந்தி நேற்று 2-வது நாளாக ஆஜரானார். முன்னதாக, அக்பர் ரோட்டில் உள்ள கட்சியின் அகில இந்திய தலைமை அலுவலகத்தில் பிரியங்காகாந்தி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.

இதனையொட்டி அக்பர் ரோட்டில் காங்கிரஸ் கட்சியினர் கூடினார்கள். அந்த பகுதியில் ஏற்கனவே 144 தடை உத்தரவு போடப்பட்டு இருப்பதால் அங்கு, கட்சி அலுவலகத்துக்கு வர அனுமதி பெற்றவர்களை தவிர வேறு யாரையும் போலீசார் அனுமதிக்கவில்லை. இதனையும் மீறி சில எம்.பி.க்கள், முக்கிய பிரமுகர்கள் வந்தனர். அவர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினார்கள்.

தமிழக காங்கிரஸ் எம்.பி.க்கள் திருநாவுக்கரசர், மாணிக்கம் தாகூர், ஜோதிமணி உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டனர். இந்த கைது நடவடிக்கையில் போலீசார் மிகவும் கடுமையாக நடந்துகொண்டதாக அவர்கள் கருத்து தெரிவித்தனர்.

திருநாவுக்கரசர் கூறும்போது, "போலீசார் மல்லுக்கட்டி பிடிக்கிறார்கள். வயிற்றில் அடிப்பது, கையை வலி ஏற்படுத்தும் விதமாக அழுத்தி பிடிப்பது, வேகமாக தள்ளுவது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். மிகவும் அநியாயமாக நடந்து கொள்கிறார்கள்" என்றார். ஜோதிமணி கூறுகையில், "போலீசார் மிகவும் கொடூரமாக, மிருகத்தனமாக நடந்துகொண்டனர். இருந்தாலும் இந்த ஆட்சியை அகற்ற நாங்கள் தொடர்ந்து போராடுவோம்" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்