மைசூரில் இருந்து 2-வது நாளாக பாதயாத்திரையை தொடங்குகிறார் ராகுல்காந்தி...!

கர்நாடகாவில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மைசூரில் இருந்து 2-வது நாளாக 'பாரத் ஜோடோ யாத்திரை' தொடங்குகிறார்.

Update: 2022-10-03 05:39 GMT

மைசூரு,

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி. இவர் 'பாரத் ஜோடோ' என்ற பெயரில் காங்கி ரஸ் பாதயாத்திரையை கடந்த மாதம்(செப்டம்பர்) 7-ந்தேதி தமிழ்நாடு கன்னியாகுமரியில் தொடங்கினார். தமிழகத்தை தொடர்ந்து கேரளாவில் 19 நாட்கள் பாதயாத்திரை நடைபெற்றது. ராகுல்காந்தியின் காங்கிரஸ் பாதயாத்திரை கடந்த 30-ந் தேதி கர்நாடகத்துக்குள் நுழைந்தது. சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டையில் ராகுல்காந்திக்கு காங்கிரசார் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர்.

கா்நாடகத்தில் 2 நாட்கள் பாதயாத்திரையை முடித்த ராகுல்காந்தி நேற்று முன்தினம் இரவு மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடு தாலுகா தாண்டவபுரா கிராமத்தில் தங்கினார்.

நேற்று காலையில் ராகுல்காந்தி, காந்தி ஜெயந்தியையொட்டி நஞ்சன்கூடு தாலுகா பதனவாலு கிராமத்தில் உள்ள காதி கிரமோத்யோக் மையத்துக்கு சென்றார். இங்கு கடந்த 1927 மற்றும் 1932 ஆகிய ஆண்டுகளில் மகாத்மா காந்தி வந்து சென்றார். அவரது நினைவாக அங்கு சிலை வைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து ராகுல்காந்தி அங்கு சென்று காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து பதனவாலு கிராமத்தில் இருந்து பாதயாத்திரையை தொடங்கிய ராகுல்காந்தி, நேற்று மாலை மைசூரு நகருக்குள் நுழைந்தார். மைசூருவில் காங்கிரஸ் கட்சியினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து நேற்று இரவு 7 மணிக்கு பாதயாத்திரையை நிறைவு செய்த ராகுல்காந்தி, தசரா கண்காட்சி பகுதியில் ஓய்வெடுத்தார்.

இந்தநிலையில், இன்று காலை மைசூருவில் இருந்து 2-வது நாளாக பாதயாத்திரையை தொடங்குகிறார். அங்கு ராகுல்காந்திக்கு காங்கிரசார் பிரமாண்ட வரவேற்பு அளிக்க உள்ளனர். ஸ்ரீரங்கப்பட்டணா வழியாக மண்டியாவுக்கு வருகிறார் ராகுல்காந்தி.

பாதயாத்திரை தொடங்கும் முன், மைசூரில் உள்ள சுத்தூர் மடத்துக்குச் சென்ற ராகுல்காந்தி ஸ்ரீ சிவராத்திரி தேசிகேந்திர சுவாமிகளிடம் ஆசி பெற்றார்.

Tags:    

மேலும் செய்திகள்